சென்னை: தமிழ்நாட்டில் குற்ற நடவடிக்கைகளைக் குறைக்கவும், தடுக்கவும் காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவின் அடிப்படையில் ஆபரேஷன் மின்னல் ரவுடி வேட்டை என்ற அதிரடி கைது நடவடிக்கையை மாநில போலீசார் நடத்தி வருவதாக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட 'மின்னல் ரவுடி வேட்டை' ஆபரேஷன் மூலம் தமிழ்நாட்டில் 133 ரவுடிகள் பிடிபட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொலை, கொள்ளை வழக்குகளில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 15 பேர் இந்த ஆபரேஷனில் சிக்கி நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், பல ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த கொலை, கொள்ளை, நில அபகரிப்பு வழக்குகளில் குற்றவாளிகளான 13 ஏ+ ரவுடிகளும் சிக்கியுள்ளதாகவும் தமிழ்நாடு காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.