சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் இ.பி. காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் ரங்கநாதன் (70). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்பு வீட்டிற்கு வந்து பார்த்தவுடன் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 15 சவரன் தங்க நகைகள் காணாமல் போனது தெரிய வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ரங்கநாதன் இதுகுறித்து பீர்க்கன்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த, புகாரின் அடிப்படையில் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 18ஆம் தேதி இரண்டு குற்றவாளிகளில் ஒருவரான ஆரிப் பிலிப் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவரும் அவரது கூட்டாளியான பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்த அன்வர் (எ) பன்னீர்செல்வம் (40) இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, ஆரிப் பிலிப் கொடுத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் தலைமறைவான மற்றொரு குற்றவாளி பன்னீர்செல்வத்தை நான்கு மாதமாக தேடி வந்தனர். இந்நிலையில், பன்னீர்செல்வம் அவரது வீட்டிற்கு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் பன்னீர்செல்வம் வீட்டின் அருகில் மப்டியில் காவல்துறையினர் பதுங்கி இருந்தனர்.