சென்னை:கே.கே நகரைச் சேர்ந்த சுபாஷ்(22) என்பவர் தனது குடும்பத்தினருடன் இன்று (அக்.1) அண்ணா நகரில் இருந்து அசோக் பில்லர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, கோயம்பேட்டில் இருந்து வந்த ஹோண்டா சிட்டி கார் ஒன்று தொடர்ந்து ஒலி எழுப்பியபடி பின் தொடர்ந்து வந்துள்ளது.
அசோக் நகரை அடைந்தபோது, அக்கார் கடக்க முயன்றபோது, ஹோண்டா சிட்டி காருக்குள் இருந்த பெண்ணுக்கும், சுபாசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பெண் யாரோ ஒருவருக்கு போன் செய்து சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளார். இருசக்கர வாகனத்தில் வந்த அந்த நபர் லேசான போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
மதுபோதையில் அங்கு வந்த நபருக்கும் சுபாஷுக்கும் வாய் தகராறு ஏற்பட்டதில் அந்த நபர் சுபாஷையும் உடன் இருந்த பெண்ணொருவரையும் ஆபாசமாகத் திட்டி, தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து சுபாஷ் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸ் விசாரணையில் சுபாஷ் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் பேரன் என்பது தெரியவந்தது.
மேலும், மதுபோதையில் சுபாஷை தாக்கியவர் இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் என்பதும், காரில் வந்த பெண் விஜயலட்சுமி கண்ணனின் உறவினர் என்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து இருதரப்பினரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி உறவினரை, தாக்கிய சம்பவத்தால் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அசோக் நகர் காவல் நிலையத்தில் குவிந்தனர். மேலும், காங்கிரஸ் தலைவர் அழகிரியும் காவல் நிலையத்திற்கு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் கூடுதல் ஆணையர் கண்ணன் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு பிரிவு உட்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யக் கூறி காவல்துறை அதிகாரியிடம் அழகிரி பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார். இதை அடுத்து கண்ணன் மதுபோதையில் இருந்தாரா? என்பதை உறுதி செய்வதற்கு நள்ளிரவில் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விவகாரத்தில் விஜயலட்சுமியின் காரை ஓட்டி வந்த கண்ணனின் ஓட்டுனர் முத்துராஜா என்பவர் மீது, நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஸ்டாலின் அரசை பாதுகாப்பது தங்களது கடமை.. கே.எஸ்.அழகிரி