தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

எம்ஜிஆர் நினைவு வளைவு எந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ளது? உயர் நீதிமன்றம் கேள்வி - High Court Question

சென்னை: எம்ஜிஆர் நினைவு வளைவு எந்த சாலையில் அமைக்கப்பட்டுள்ளது என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

highcourt

By

Published : Feb 6, 2019, 3:20 PM IST

சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் தினேஷ்குமார் என்பவர், உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்திருந்தார். அதில், இரண்டு கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் சென்னை மெரீனா கடற்கரையை ஒட்டிய காமராஜர் சாலையில் எம்ஜிஆர் நினைவு வளைவு கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் சட்டத்தின் படி, சாலைகளின் குறுக்காக நிரந்தர கட்டுமானங்களையும் கட்டக்கூடாது என கூறப்பட்டுள்ள நிலையில், அரசியல் லாபத்திற்காக எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு கட்டப்பட்டுள்ளது. எனவே, இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசு விழா நடத்தாமல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர உத்தரவிட்டிருந்தது. மேலும், மனுதாரர் கூறுவது போல, காமராஜர் சாலை தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலையில் வருகிறதா? என பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண் ஆஜராகி, சென்னையில் உள்ள 21 மாநில நெடுஞ்சாலைகளிலும், ஜிஎஸ்டி, ஜிஎன்டி, கிராண்ட் வெஸ்டர்ன் ஆகிய மூன்று தேசிய நெடுஞ்சாலைகளிலும் இடம் பெறவில்லை .

மேலும், மாநகராட்சி பதிவேட்டின் படி 17.8 கிலோ மீட்டர் நீள மாநகராட்சி சாலையில் ஒன்றாக காமராஜர் சாலை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் மனுதாரர் கூறுவதை ஏற்க கூடாது என அரசு வழக்குரைஞர் வாதிட்டார்.

அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை நாளை ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details