சென்னை:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு செங்கல்பட்டு மார்க்கமாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கோயம்பேட்டில் புறப்பட்டு நசரத்பேட்டை புறவழிச்சாலை வழியாக கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் சென்று பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்லும். நகரத்தின் உட்பகுதிகளான வடபழனி முதல் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் வரை காவல்துறையின் உத்தரவின்படி ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது.
எனவே, பயணிகள் கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையம் ஆகிய 2 இடங்களில் ஆம்னி பேருந்துகளில் ஏறிச் செல்லலாம். கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் பாண்டிச்சேரி வழியாக செல்லும் ஆம்னி பேருந்துகள் காவல்துறை அனுமதியுடன் வழக்கம்போல் இயக்கப்படும்.