சென்னை: பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான இரண்டு பாடங்களுக்கான வினாத்தாளின் பொது அறிவுப் பிரிவில், முந்தைய தேர்வின் 10 வினாக்கள் இடம்பெற்றது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனத் தனியார் கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இது குறித்து முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. அதில், “பல்தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கான (Polytechnic) விரிவுரையாளர் தேர்வு கடந்த டிசம்பர் 8ஆம் தேதிமுதல் 12ஆம் தேதிவரை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் (TRB) நடத்தப்பட்டது.
விவாதத்துக்குள்ளான கேள்விகள்
190 மதிப்பெண்களுக்கு கணினி வழியாக நடைபெற்ற இத்தேர்வில், 180 மதிப்பெண்களுக்கு அந்தத் துறை சார்ந்த வினாக்களும், 10 மதிப்பெண்களுக்கு பொது அறிவு சம்பந்தமாக 10 வினாக்களும் கேட்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் பங்குபெற்று எழுதிய இத்தேர்வில் ஒரு மதிப்பெண்கூட தேர்வு முடிவுகளை மாற்றும் வகையில் அமையும்.
இந்நிலையில் வேதியியல் துறைக்காக முன்பு நடத்தப்பட்ட தேர்வுகளில் இடம்பெற்றிருந்த 10 பொது அறிவுப் பிரிவு வினாக்கள், அப்படியே இசிஇ (ECE) துறைக்கு மீண்டும் எவ்வித மாற்றமும் இல்லாமல் கேட்கப்பட்டுள்ளது. இது தற்போது டிஆர்பி (TRB) வெளியிட்டுள்ள விடைத் தொகுப்பின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.