சென்னை:தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தற்போது வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் நேற்று (நவ.28) இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து இன்று (நவ.29) காலை 08.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது.
தென் தமிழகத்தைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தென் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பதிவாகி உள்ளது. இதேபோல், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், மிக லேசான மழை பதிவாகி உள்ளன.
நேற்று இரவு முதல் சென்னை நகர் அதன் புறநகரிலும் மழையானது பரவலாக பெய்து வருகிறது.
இதேபோல் சென்னையின் புறநகர் பகுதிகளான மதுரவாயல், திருவேற்காடு, பாடி, அம்பத்தூர், ஆவடி ஆகிய இடங்களில் காலை 6 மணி முதல் தொடர்ச்சியாக சாரல் மழை பெய்து வருகிறது. அதேபோல் அண்ணா நகர், தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் முடிச்சூர், வண்டலூர் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.
போக்குவரத்து நெரிசல்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் இருந்து தொடர் மழை பெய்து வருவதால் ஜிஎஸ்டி சாலை, உள் வட்டசாலை, 100 அடி சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை, ஓஎம்ஆர், ஈசிஆர், நெல்சன் மாணிக்கம் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அம்பத்தூர் ஆகிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும், இன்று காலை முதல் வானம் முழுவதும் மேகமூட்டத்தால் சூழ்ந்தும், தொடர்ந்து சாரல் மழையும் பெய்து வருகிறது.