சென்னை: கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா அருகே கட்ந்த ஜுன் 2ஆம் தேதி இரவு விபத்துக்குள்ளானது. மேற்கு வங்கத்தில் இருந்து புறப்பட்ட யஷ்வந்த்பூர் - ஹவுரா விரைவு ரயில் பாஹனாக நகர் அருகே வந்து கொண்டிருந்த போது கோரமண்டல் விரைவு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளாகி தடம் புரண்டது.
இந்த விபத்து நாட்டையே உலுக்கியுள்ளது. மத்திய அரசு மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி விபத்தி சிக்கியவர்களை மீட்டது. தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான மீட்பு படையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தற்போது வரை இந்த ரயில் விபத்தில் 281க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 700க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தென்கிழக்கு ரயில்வே தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய அளவில் ஏற்பட்டுள்ள இந்த விபத்து பல்வேறு தரப்பினர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இந்த விபத்து குறித்து சினிமா பிரபலங்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மிகவும் துயரமான இந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கும் எனது இரங்கல்கள். ஒவ்வொரு நபருக்காகவும் நான் பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.
நடிகை அனுஷ்கா தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒடிசா ரயில் விபத்து மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.