யானைகள் நல ஆர்வலர் முரளிதரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார். அவர் தனது மனுவில், ஊருக்குள் நுழைந்த காட்டு யானையை மீட்பதாக கூறி, அதிகளவில் மயக்க மருந்து செலுத்தியும், கும்கி யானைகளை பயன்படுத்தியும் வனத்துறையினர் துன்புறுத்துக்கின்றனர்.
வனத்துறையினரின் அக்கறையின்மையும், யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிபுணத்துவம் கொண்ட மருத்துவர்கள் இல்லாததும், போதுமான மருத்துவ வசதிகள் இல்லாததுமே, காட்டு யானைகளின் மரணங்களுக்கு காரணம். யானைகளை கொண்டு செல்ல குஷன் உள்ளிட்ட சிறப்பு வசதிகள் கொண்ட லாரிகளை கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும், சர்வதேச ஆலோசகரை நிரந்தரமாக நியமிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் நீலகிரி மாவட்டம், மசினக்குடியில் 40 வயது மதிக்கத்தக்க காட்டு யானைக்கு தீ வைத்த சம்பவம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கண்டெய்னர் லாரி மோதி யானை உயிரிழந்த சம்பவங்களை தனது மனுவில் மேற்கோள் காட்டியிருந்தார்.