தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் உடல்நலம் குறித்த பொதுமக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாதம் இருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் சார்பில் மூட்டுவலி குறித்த பொதுமக்களுக்கான விழிப்புணர்வு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நடைபெற்றது. இதில் சிறப்பு மருத்துவர் சிங்கார வடிவேல் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினார்.
அப்போது அவர் கூறுகையில், அறிவியலின் அசுர வளர்ச்சியால் மனிதன் வசதிகளை பெருக்கிக் கொண்டு வந்தாலும், அதனை அனுபவிக்க நோயில்லாத வழியில்லாத உடல்நலம் வேண்டும். ஆர்த்ரைடிஸ் எனப்படும் மூட்டு அழற்சி நோய் மூட்டுகளை பாதிக்கும் எந்த ஒரு அசைவும் வலியை உண்டாக்கக் கூடியதாக அமையும்.
எந்த ஒரு மனிதனுடைய நடமாட்டமும் வலியினால் பாதிக்கப்பட்டு, அதனால் அவன் விரும்புகின்ற இடங்களுக்கு செல்ல முடியவில்லை என்றால் அந்த வாழ்க்கை முழுமையானதாக நிறைவானதாக இருக்க முடியாது.
மேலும் இந்தியாவில் 18 கோடிக்கும் அதிகமான மக்கள் மூட்டு அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பின் கணக்கின்படி 60வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் 9.6 சதவீதமும், பெண்களில் 18 சதவீதமும் உலகளவில் மூட்டு அழற்சி அறிகுறி கொண்டவர்களாக உள்ளனர்.
இந்த நோய் ஆண்களை விட பெண்களிடம் அதிக அளவில் காணப்படுகிறது. முதுமை, உடல் பருமன், உட்கார்ந்த வாழ்க்கை முறை போன்ற தொடர்புடைய காரணிகளின் அதிகரிப்பு காரணமாக இந்த நோயின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மூட்டு அழற்சி நோய் வாதத்தினால் அல்லது முடக்குவாதத்தினாலும் இந்த நோய் வரலாம்.
முடக்கு வாதம் போன்ற நோய்களுக்கு பல வகையான மருந்துகள் உள்ளன. அவைகளைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.