சென்னை:அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பெட்ரோல், டீசல் விலை குறிப்பு குறிப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "உலக அளவில் பணவீக்கம் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள இந்தச்சூழ்நிலையில் பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு எட்டு ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ஆறு ரூபாயும் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது மட்டுமல்லாமல், ‘உஜ்வாலா’ திட்டத்தின்கீழ் ஏழைப் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள எரிவாயு இணைப்புகளுக்கு, ஆண்டுக்கு 12 உருளைகளுக்கு, தலா 200 ரூபாய் மானியம், பிளாஸ்டிக், நிலக்கரி, இரும்பு மற்றும் உருக்கு மீதான வரி குறைப்பு, கூடுதல் உர மானியம், சிமெண்ட் விலையை குறைக்க நடவடிக்கை என பல்வேறு அறிவிப்புகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புகளை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கிறேன்.
மத்திய அரசின் இந்த அறிவிப்பின் மூலம், ஒவ்வொரு மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரிக்கேற்ப, பெட்ரோல் விலை லிட்டருக்கு 9 ரூபாய் 50 காசு அளவுக்கும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாய் அளவுக்கும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம், அத்தியாவசியப் பொருள்கள், காய்கறிகள், பழங்கள், கட்டுமானப் பொருள்கள் ஆகியவற்றின் விலைகளும் குறையும். ஆட்டோ, டாக்சி போன்ற வாகனங்களுக்கான கட்டணங்கள் குறையவும் வழி வகுக்கும் என்பதோடு மட்டுமல்லாமல், பணவீக்கம் குறையவும் வாய்ப்பு ஏற்படும்.
கேரளா குறைத்துள்ளது: மத்திய அரசின் இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, கேரளா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை குறைத்துள்ளன. திமுக-வின் தேர்தல் அறிக்கையிலுள்ள வாக்குறுதியினை நிறைவேற்றும் வகையில், பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு மேலும் இரண்டு ரூபாய் குறைக்கவும், டீசல் மீதான வரியை நான்கு ரூபாய் குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.