தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை'- அரசின் திட்டத்தை விமர்சித்து ஓபிஎஸ் அறிக்கை

கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிவராண உதவிகள் வழங்கப்படும் என அரசு அறிவித்த திட்டத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

o-panneerselvam-statement-on-govt-scheme-for-children-who-loosed-their-parents-in-corona
'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை'- அரசின் திட்டத்தை விமர்சித்து ஓபிஎஸ் அறிக்கை

By

Published : Jun 28, 2021, 7:18 PM IST

சென்னை:இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தொற்றால் பெற்றோரை இழந்து ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் சில நிவாரண உதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த மே 29ஆம் தேதி அறிவித்தார். இதனை நடைமுறைப்படுத்தும் வகையில், சமூக நலத்துறையால் வெளியிடப்பட்டுள்ள ஆணையையும், அதன் வழிகாட்டு நெறிமுறைகளையும் பார்த்தால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று நினைக்க தோன்றுகிறது.

அரசின் அறிவிப்பு

மே 29ஆம் தேதி வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், கரோனா தொற்றினால் பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு அவர்களது பெயரில் 5 லட்சம் ரூபாய் வைப்பீடு செய்து 18 வயது முடிந்தவுடன் வட்டியோடு வழங்கப்படும். அவர்களுக்கு அரசு இல்லங்கள், விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் இடம் வழங்கப்படும்.

பட்டப்படிப்பு வரை கல்விக் கட்டணம், விடுதிக்கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்றுக்கொள்ளும். தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று லட்சம் ரூபாய் வழங்கப்படும். அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் தங்காத குழந்தைகளுக்கு பராமரிப்புச் செலவாக மாதந்தோறும் 3 ஆயிரம் ரூபாய் 18 வயது வரை வழங்கப்படும், இதுகுறித்து வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சமூக நலத்துறையின் வழிகாட்டு நெறிமுறை

இந்நிலையில், சமூக நலத்துறையால் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டு தாய் அல்லது தந்தை ஆகியோரில் யாராவது ஒருவர் இறந்து, அவர் குடும்பத்தின் பொருளீட்டும் நபராக இருக்கும்பட்சத்தில், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தால், பராமரிக்கப்பட்டு வரும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் பட்டியலில் அவர் பெயர் இருப்பின் அவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தப்பட்டியலில் அவர் பெயர் இல்லாத பட்சத்தில், வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள பட்டியலில் அவர் சேர்க்கப்பட தகுதியுள்ளவரா என்று ஆராய்ந்து அதன்பின் அவர் பெயர் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல் இறந்த தாய், தந்தை இருவருமோ அல்லது இறந்த தாயோ அல்லது தந்தையோ அரசாங்கத்திலோ அல்லது பொதுத்துறை நிறுவனங்களிலோ பணிபுரிந்திருந்தால், அவர்களின் குழந்தைகள் நிவாரணத் தொகை பெற தகுதியானவர்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனாளிகளை குறைக்க வழி

இதுபோன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பயனாளிகளை குறைப்பதற்கான வழி என்றே மக்கள் கருதுகிறார்கள். மேலும், குடும்பத்தில் உள்ள பொருளீட்டும் நபரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கிடையே பாகுபாட்டினை உருவாக்குவதாக அமையும். இந்த நிவாரண உதவி என்பது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஒன்று என்பதால், இதில், பெற்றோரின் வேலைவாய்ப்பை ஓர் அளவுகோலாக எடுத்துக்கொள்வது பொருத்தமாக இருக்காது.

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி ஆதரவற்ற குழந்தைகளுக்கிடையே பாகுபாட்டினை ஏற்படுத்தாமல் பெற்றோர்களை இழந்து தவிக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் நிவாரண உதவி கிடைக்க வழிவகை செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என ஓ.பன்னீர்செல்வம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ஊரக வேலைத் திட்டம்... ஏழைகளுக்கு 150 நாள்கள் பணி வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details