தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திமுக ஆட்சியில் வழங்கப்படும் பொங்கல் பரிசை வைத்து என்ன செய்ய முடியும்? - ஓபிஎஸ் - பொங்கல் பரிசு தொகுப்பு ஓபிஎஸ்

அதிமுக ஆட்சிக் காலத்தில் ரூ.2,500 நிதியுதவி வழங்கப்பட்டபோது ரூ.5,000 வழங்கப்பட வேண்டும் என்று கூறியது திமுக. இதுபோன்று பலவற்றைக் கூறி மக்களை ஏமாற்றி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திமுக 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கம் இல்லாமல் வெறும் பொங்கல் தொகுப்பினை மட்டும் வழங்க ஆணையிட்டது. அதை வைத்து என்ன செய்ய முடியும்? என வினா தொடுத்துள்ளார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்.

திமுக ஆட்சியில் வழங்கப்படும் பொங்கல் பரிசு வைத்து என்ன செய்ய முடியும் ? ஓபிஎஸ்
திமுக ஆட்சியில் வழங்கப்படும் பொங்கல் பரிசு வைத்து என்ன செய்ய முடியும் ? ஓபிஎஸ்

By

Published : Jan 7, 2022, 3:05 PM IST

சென்னை: நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள பொருள்கள் தரமற்று இருப்பதாகவும், எல்லோருக்கும் 21 பொருள்கள் கிடைக்கவில்லை என்றும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்துப் பொருள்களும் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், பொங்கல் பண்டிகைக்கு முன்பே அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்துப் பொருள்களும் நல்ல முறையில் வழங்கிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக 5,604 கோடி; திமுக 1,159 கோடி

ஓபிஎஸ் வெளியிட்ட அந்த அறிக்கையில், "அதிமுக ஆட்சிக் காலத்தில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2020ஆம் ஆண்டு ஆயிரம் ரூபாய் ரொக்கம் உள்பட 2,363 கோடி ரூபாய் மதிப்பிலான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

2021ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டாயிரத்து 500 ரூபாய் நிதி உதவி உள்பட 5,604 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு

அதிமுக ஆட்சிக் காலத்தில் 2,500 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டபோது 5,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்று கூறியது திமுக. இதுபோன்று பலவற்றைக் கூறி மக்களை ஏமாற்றி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திமுக 2022ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரொக்கம் இல்லாமல் வெறும் பொங்கல் தொகுப்பினை மட்டும் 1,159 கோடி ரூபாய் மதிப்பில் துணிப்பை உள்பட 21 பொருள்களை வழங்க ஆணையிட்டது.

தரமற்ற பொங்கல் பரிசு

இந்தப் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணிகள் இந்த மாதம் நான்காம் தேதி முதல் நடைபெற்றுவருகின்றன. திமுக அரசின் அறிவிப்பிற்கு இணங்க பொங்கலுக்குத் தேவையான பொருள்கள், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான பொருள்கள் வழங்கப்படுகின்றனவா என்று பார்த்தால் அதிலும் பெரும் குளறுபடி நடந்திருப்பதாகப் பொருள்களைப் பெற்றுச் செல்லும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் உள்ள பொருள்கள் தரமற்று இருப்பதாகவும், எல்லோருக்கும் 21 பொருள்கள் கிடைக்கவில்லை என்றும், பெரும்பாலான பைகளில் 5 முதல் 6 பொருள்கள் குறைவாக இருப்பதாகவும், இருக்கின்ற பொருள்களின் பொட்டலங்கள் திறந்திருப்பதாகவும், சில பகுதிகளில் துணிப்பை கொடுப்பதில்லை என்றும் ஆங்காங்கே பொதுமக்கள் குறைகூறும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிக்கொண்டிருக்கின்றன.

பொங்கல் பரிசுத் தொகுப்பு

திமுக அரசின் மெத்தனம்

இது மட்டுமல்லாமல், சில பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் வழங்கிய வெல்லம் பாகுபோல் உருகியுள்ளதாகத் தகவல் வருகிறது. இது குறித்து நியாயவிலைக் கடைகளில் பணிபுரிவோரிடம் கேட்டால் எங்களுக்கு என்ன வருகிறதோ அதைத்தான் நாங்கள் வழங்க முடியும் என்று வேதனையோடு அவர்கள் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது. திமுக அரசின் மெத்தனப்போக்கிற்கு நியாயவிலைக் கடைகளில் பணிபுரிவோர் என்ன செய்வார்கள்?

இந்தச் சூழ்நிலையில், உணவுத் துறை அமைச்சர், எல்லா நியாயவிலைக் கடைகளிலும் பொருள்களின் பட்டியலை வைக்கவும், அனைத்துப் பொருள்களும் உள்ளனவா என்று சரிபார்க்க குடும்ப அட்டைதாரர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இந்த மாதம் 31ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பினைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்திருப்பதாகச் செய்தி வந்துள்ளது.

மக்கள் மனங்களில் சந்தேகம்

குடும்ப அட்டைதாரர்கள் சரிபார்த்து புகார் கொடுப்பதால்தான் இந்தப் பிரச்சினையே எழுகின்றது. இதன் பல நியாயவிலைக் கடைகளில் வாக்குவாதம் ஏற்படுகிறதேயொழிய பொருள்கள் மக்களைச் சென்றடையவில்லை. இது தவிர, இப்போது வாங்காமல் விட்டுவிட்டால் பின்னர் கிடைக்காது என்ற சந்தேகமும் மக்கள் மனங்களில் எழுந்துள்ளது.

எனவே, அனைத்துப் பொருள்களும் இருக்கின்றனவா என்பதை உறுதிசெய்து நியாயவிலைக் கடைகளுக்கு வழங்க வேண்டிய கடமை அரசுக்குத்தான் இருக்கிறது. இதை அரசு செய்ய வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பே இந்த மாதம் 14ஆம் தேதி பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்பதற்காகத்தான்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு

அதை வைத்து என்ன செய்ய முடியும்?

இந்த நிலையில், தவிர்க்க இயலாத காரணங்களால் தொகுப்பைப் பெற இயலாதவர்கள் இந்த மாதம் 31ஆம் தேதிவரை பெற்றுக் கொள்ளலாம் என்பது எந்த நோக்கத்திற்காக இந்தப் பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டதோ, அதைச் சிதைக்கும் வகையில் ரொக்கமாக இருந்தால், கடன் வாங்கி பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிவிட்டு பின்னர் அதைத் திருப்பிச் செலுத்திவிடலாம்.

ஆனால், தற்போது திமுக ஆட்சியில் வழங்கப்படுவதோ வெறும் தொகுப்பு. அதை வைத்து என்ன செய்ய முடியும்? எனவே, முதலமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி, பொங்கல் பண்டிகைக்கு முன்பே அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்துப் பொருள்களும் நல்ல முறையில் கிடைக்கவும், ஏற்கனவே வாங்கிய தொகுப்பில் குறைபாடு இருந்தால், அதனைச் சரிசெய்யவும் ஆவன செய்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'அம்மா உணவகம் மூடப்படாது, இதுவே என் முடிவு'- முதலமைச்சர் ஸ்டாலின் உரை

ABOUT THE AUTHOR

...view details