சென்னை:மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் முதல் முறையாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் விசாரணைக்காக நேற்று (மார்ச்.21) நேரில் ஆஜரானார். இதேபோல, சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசியும் விசாரணைக்காக ஆஜரானார்.
இந்நிலையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று (மார்ச்.22) இரண்டாவது முறையாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் காலை 10:30 மணிக்கு நேரில் ஆஜரானார். சுமார் இரண்டு மணி நேரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணையில், திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய மூன்று இடைத்தேர்தலுக்கும் வேட்பாளரை தேர்வு செய்தது ஜெயலலிதா தான் என ஆறுமுகசாமி ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், இடைத்தேர்தல் தொடர்பான படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்கு தெரியும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.