சென்னை:ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக்கூறி இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும், வழக்கை 2 வாரத்தில் விசாரித்து முடிக்க வேண்டுமெனவும் தனி நீதிபதிக்கு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி இந்த வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நாளை பிற்பகல் 2:15 மணிக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, கடந்த ஜூலை 11இல் பிறப்பித்த உத்தரவில், ஓ.பன்னீர்செல்வம் குறித்து தேவையில்லாத கருத்துகளை தெரிவித்துள்ளதால், பொதுக்குழு தொடர்பான வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தரப்பில் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.