தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இது சட்டத்தின் ஆட்சியா? அல்லது சமூக விரோதிகளின் ஆட்சியா? - ஓபிஎஸ் அடுக்கடுக்கான கேள்வி

தமிழ்நாட்டில் நடப்பது சட்டத்தின் ஆட்சியா? அல்லது சமூகவிரோதிகளின் ஆட்சியா? என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 10, 2023, 5:07 PM IST

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஜூலை 10) வெளியிட்ட அறிக்கையில், ''ஒரு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும் அடிப்படையாக விளங்குவது சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளை, தற்கொலை, பாலியல் வன்கொடுமை, போதைப்பொருட்கள் அதிகரிப்பு என சட்ட விரோதமான செயல்கள் அன்றாடம் நடைபெற்று வருகின்றன. சட்ட விரோதச் செயல்கள் நடைபெறுவது என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. சட்டம் - ஒழுங்கை சீரழித்து வரும் தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்தடுத்து நடந்த பயங்கர சம்பவங்கள்:இரண்டு நாட்களுக்கு முன்பு, திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி அருகே அருணாசலம் என்பவர், தன் மகள் வீடு அருகே நின்று கொண்டிருந்தபோது, அவரை மர்மக்கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை (Eruvadi murder case) செய்துள்ளது.

இதேபோன்று, இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கரும்புள்ளிப்பட்டியைச் சேர்ந்த ஐஸ் வியாபாரி குப்புசாமி என்பவர் மணப்பாறை சாலையில் தன் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது வன்முறை கும்பலால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு இருக்கிறார். கிருஷ்ணகிரியில் விவசாயி சிவராமன் என்பவர் தன்னுடைய வியாபாரத்தை முடித்துவிட்டு காரில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர், அவர்மீது மிளகாய்ப் பொடி தூவி வெட்டிக் கொலை செய்திருக்கின்றனர்.

நேற்று முன் தினம் திருச்சி மாவட்டம், முசிறி அருகே சுக்காம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவின்போது தீபக் என்பவர் கத்தியால் வெட்டப்பட்டு உயிரிழந்துள்ளார். காவல்துறைக்கே சவால்விடும் வகையில், நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் ஆயிரம் பாக்கு மரங்கள் மர்ம நபர்களால் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளன. நேற்று மாலை, சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்த டொக்கன் ராஜா மர்மக்கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். தண்டையார்பேட்டை, சேனியம்மன் கோயில் அருகே தமிழரசன் என்பவரை இரு சக்கர வாகனத்தில் சென்ற மூவர் கத்தியால் ஓட ஓட வெட்டிய நிலையில், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

ஆளும் திமுக எம்.எல்.ஏவுக்கே பாதுகாப்பு இல்லை:நேற்று முன்தினம், பாட்டாளி மக்கள் கட்சியின் செங்கல்பட்டு வடக்கு நகரச் செயலாளர் நாகராஜ் என்பவரை கொட்டும் மழையில் ஏழு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது. இவையெல்லாம் கடந்த இரண்டு நாட்களில் நடைபெற்ற ஒருசில சம்பவங்கள். இவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில், கடலூர் மாவட்டத்தில் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் அவர் மீது பெட்ரோல் வெடிகுண்டு வீசியுள்ளதாக இன்று அனைத்து பத்திரிகைகளிலும் செய்திகள் வந்துள்ளன. அதாவது ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை தமிழ்நாட்டில் தற்போது நிலவுகிறது.

இன்னும் சொல்லப்போனால் காவல் துறையினரையே ரவுடிகள் மிரட்டும் அளவுக்கு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் என்றால், மறுபுறம் உசிலம்பட்டியில் பேருந்து நிலையத்தை புதுப்பிப்பது தொடர்பான நகரமன்ற ஆலோசனைக் கூட்டத்தில் தி.மு.க. பெண் நகராட்சித் தலைவருக்குப் பதிலாக அவருடைய மகனும், தி.மு.க. இலக்கிய அணி மாவட்டச் செயலாளருமான விஜய் என்பவர் வியாபாரிகள் எழுப்பிய சந்தேகங்களுக்குப் பதில் அளித்ததாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. நகர் மன்றக்கூட்டத்தில் நகர்மன்றத் தலைவரின் மகன் உள்ளே சென்று பதில் அளிப்பது என்பது சட்டவிரோதச் செயல்.

இரும்புக்கரம் கொண்டு குற்றங்களை ஒடுக்கவும்:தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருப்பது சட்டத்தின் ஆட்சியா அல்லது சமூகவிரோதிகளின் ஆட்சியா என்று கேள்வி எழுப்பும் அளவுக்கு சட்டம்-ஒழுங்கு நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. இதற்குக் காரணம் சமூக விரோதிகளிடம் ஆட்சியாளர்கள் மென்மையாக நடந்து கொள்வதுதான். சட்டம்-ஒழுங்கு சீராக இருக்க வேண்டுமானால், சமூக விரோதிகளை, வன்முறையில் ஈடுபடுபவர்களை, குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை, அதிகார துஷ்பிரயோகம் செய்பவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

தி.மு.க. அரசின் உறுதியற்ற நடவடிக்கை காரணமாக இதுபோன்ற வன்முறைச் செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது தமிழ்நாட்டின் வளர்ச்சியை கடுமையாகப் பாதிக்கும். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாக விளங்கும் சட்டம் - ஒழுங்கை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென்றும், ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினரை தாக்கும் வகையில் பெட்ரோல் வெடிகுண்டினை வீசிய சம்பவம் உள்பட அனைத்து கொலைச் சம்பவங்களுக்கும், அதிகார துஷ்பிரயோகத்திற்கும் காரணமானவர்கள்மீது சட்டப்படி வழக்கினை பதிவு செய்து தண்டனை பெற்றுத் தரவேண்டுமென்றும் முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என அதில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு பாதுகாப்பினை அதிகரிக்க வேண்டும்; டிஜிபியிடம் பாஜகவினர் கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details