சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கம் செய்யப்பட்டது முதல் தொடர்ந்து நீதிமன்றங்களிலும், தேர்தல் ஆணையத்திலும் சட்டப்போரட்டம் மேற்கொண்ட ஓபிஎஸ்-க்கு தோல்வி மட்டுமே மிஞ்சியது. அதிமுகவிற்கும் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இனி சட்டப்பூர்வமாக எந்த தொடர்பும் இல்லை என்ற நிலையில் அவரது அடுத்தகட்ட நகர்வு குறித்து கேள்வி எழுந்துள்ளது.
இந்த சமயத்தில் ஓபிஎஸ் அணியில் சுறுசுறுப்பாக பணியாற்றக்கூடியவர்களை அதிமுகவிற்குக் கொண்டு வர நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், டிடிவி தினகரனின் அமமுகவோடு தன்னை இணைத்துக் கொள்வது, பாஜகவோடு இணைந்து விடுவது அல்லது தனியாகக் கட்சி தொடங்குவது என ஓபிஎஸ்சிற்கு ஒரு சில வாய்ப்புகள் உள்ளன என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை அதிமுகவில் சேர்வதற்கான கதவு ஓபிஎஸ்சிற்கு திறக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஓபிஎஸ் அதிமுகவில் இணைய இனி வாய்ப்பே இல்லை என்றும் ஓபிஎஸ் விருப்பப்பட்டாலும் அதிமுகவில் இனி இணைய முடியாத சூழல் நிலவுகிறது என்றும். அமமுக தலைவர் பதவி ஓபிஎஸ்சிற்கு கொடுக்கப்படலாம் என்றும் கூறப்பட்ட நிலையில் அதை ஏற்க ஓபிஎஸ் மறுத்துவிட்டார்.
அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் பாஜகவை முழுமையாக நம்பி இருந்த ஓபிஎஸ்க்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சிய நிலையில், சமீப காலமாக ஓபிஎஸ் அணிக்கும், பாஜகவிற்கும் மோதல் போக்கு ஏற்படுவதைப் பார்க்க முடிகிறது. பாஜகவும் கைவிட்ட நிலையில் இறுதியாக புதிய கட்சி தொடங்குவதற்கான பணிகளில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த ஆக.21ஆம் தேதி சென்னையில் "நமது புரட்சி தொண்டன்" என்ற நாளிதழை ஓபிஎஸ் தொடங்கினார். புதிய கட்சி தொடங்குவதற்காக அம்மா திமுக, புரட்சித் தலைவர் அதிமுக என்ற பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில், புதிய கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஓபிஎஸ், சஸ்பென்ஸ் என கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் புதிய கட்சி தொடங்க வேண்டாம் எனவும் வேண்டும் என்றால் தாமரை சின்னத்தில் உங்களுக்கு இடம் ஒதுக்குகின்றோம் எனவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தரப்பு ஓபிஎஸ் தரப்பிடம் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இதற்குப் பின்னால் எடப்பாடி பழனிசாமியின் அழுத்தம் இருக்கலாம் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால், ஓபிஎஸ் தரப்பினர் குழப்பத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஏதோ ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் ஓபிஎஸ் உள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று.