சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தை கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். ஓபிஎஸ் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பில் இடைத்தேர்தல் தொடர்பாகவும், அதிமுக உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தினார்.
அதில், "எடப்பாடி அணியினர் தேர்தலை சந்திப்பதற்காக முழுவீச்சில் இறங்கியுள்ளனர். அதே வேகத்தில் நாமும் இறங்கினால் இரட்டை இலை சின்னம் முடங்குவதற்கான வாய்ப்பும் உள்ளது" போன்ற பல தகவல்களை ஓபிஎஸ்ஸிடம் தனியரசு பேசியுள்ளதாக கூறப்படுகிறது.
ஓபிஎஸ்ஸுடன் சந்திப்பிற்குப் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, "அதிமுக உட்கட்சி தொடர்பான வழக்கு, இடைத்தேர்தல் போன்றவை குறித்து ஓபிஎஸ்ஸிடம் விரிவாக பேசியுள்ளேன். இடைத்தேர்தலில் எங்களுடைய ஆதரவு ஓபிஎஸ்க்கு தான். ஓபிஎஸ்ஸை தவிர்த்துவிட்டு அதிமுக வலிமை பெற முடியாது. திமுக கூட்டணி சிதறாமல் உள்ளது. ஆனால், அதிமுக கூட்டணி சிதறிக் கிடக்கிறது. ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் தனித்தனியாக வேட்பாளரை நிறுத்துவது அதிமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.