சென்னை:இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இயற்கை சீற்றத்தின்போது விவசாயிகளுக்கு தேவையான நிவாரணங்களை அளிப்பதற்கான கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு உண்டு. கடந்த 4 நாட்களாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருவதால், லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 30,000 ஏக்கரில் சம்பா பயிர் பயிரிடப்பட்ட நிலையில், 20,000 ஏக்கரில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள ஏக்கரில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கடந்த 4 நாள் தொடர் மழை காரணமாக மழை நீர் தேங்கி அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்து.
தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஏற்கெனவே அறுவடை செய்த நெல்லையும் காய வைக்க முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. உளுந்து, பயறு போன்றவற்றை சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை பகுதிகளில் நெல் மற்றும் கடலை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதனால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு 30,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். இதர பயிர்களுக்கு தற்போதுள்ள உற்பத்தி செலவுக்கு ஏற்ப நிவாரணம் வழங்கப்பட வேண்டுமென்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறுவடை செய்யப்பட்ட நெல்லை காய வைக்க இயலாததன் காரணமாக, நெல்லின் ஈரப்பத அளவை 17 விழுக்காட்டிலிருந்து 22 விழுக்காடாக உயர்த்தி நெல் கொள்முதல் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.