தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கலைஞர் நூற்றாண்டு விழா தேதியை மாற்றியமைக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்!

Kalaignar 100: கலைஞர் நூற்றாண்டு விழா தேதியை மாற்றியமைக்க வேண்டும் என தமிழ் திரைப்படத் துறையினருக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு விழா தேதியை மாற்றியமைக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்!
கலைஞர் நூற்றாண்டு விழா தேதியை மாற்றியமைக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 10:53 AM IST

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழா அடுத்த மாதம் டிசம்பர் 24ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், தேதியை மாற்றியமைக்குமாறு தமிழ் திரையுலகினருக்கும், தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினருக்கும் ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தனக்காக மட்டுமே வாழும் மனிதர்களை காலம் சக்கையாக துப்பிவிடுகிறது. அவர்களது வாழ்க்கைப் பயணத்தையும் சுவடுகளற்ற பயணமாகவும் காலம் மாற்றி விடுகிறது. ஆனால், பிறருக்காக வாழ்ந்தவர்களின் வாழ்க்கைச் சுவடுகளை காலம் பத்திரமாக போற்றிப் பாதுகாக்கிறது.

அத்தகைய மகத்தான மனிதர்கள் இந்த உலகை விட்டு மறைந்து விடலாம், ஆனால் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையை, மனித குலத்திற்கு ஆற்றிய பங்களிப்பை காலம் பத்திரமாக போற்றி பாதுகாக்கிறது. எம்.ஜி.ஆரின் வாழ்க்கையையும் அப்படித்தான் காலம் போற்றி பாதுகாக்கிறது.

தன்னுடைய திரைப்படங்கள் மூலம் நல்ல சிந்தனைகளையும், கருத்துள்ள பாடல்களையும் மக்கள் மனதிலே பதிய வைத்து, மக்களை நல்வழிபடுத்திய மாபெரும் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். தென்னிந்திய நடிகர் சங்கம் உருவாவதில் முக்கியப் பங்கு வகித்த பெருமைக்குரியவர் எம்.ஜி.ஆர். "எனது இதயக்கனி எம்.ஜி.ஆர்' என்று அண்ணாவால் பாராட்டப்பட்டவர் எம்.ஜி.ஆர்.

1967ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அண்ணாவின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏற்பட்டதற்கு அடித்தளமாக விளங்கியவர், எம்.ஜி.ஆர். "தம்பி நீ முகத்தைக் காட்டினால் போதும், முப்பது இலட்சம் ஒட்டு வரும்" என்று அண்ணாவே கூறியதை நான் இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, அவருடைய கொள்கைகளை நிலைநாட்டுவதற்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கி, தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தொடர்ந்து பத்து ஆண்டுகள் இருந்து, மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றிய பெருமைக்குரியவர் எம்.ஜி.ஆர்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், திரைத் துறை மற்றும் அரசியல் துறை ஆகிய இரண்டிலும் கொடிகட்டிப் பறந்து, யாரும் எட்ட முடியாத உயரத்தை அடைந்து, வரலாற்றின் பக்கங்களில் ஒரு நிலையான, நிரந்தரமான இடத்தைப் பிடித்த மகத்தான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆர் மறைந்து 35 ஆண்டுகள் ஆகியும், உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் மக்களின் மனங்களில் நீக்கமற நிறைந்தவராக இன்றும் அவர் வாழ்கிறார் என்றால், அதற்குக் காரணம் அவர் செய்த அளப்பரிய சாதனைகள்தான். இப்படிப்பட்ட மகத்தான தலைவர் மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்கு சென்ற நாள் டிசம்பர் 24.

இந்த நாள், தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே எம்.ஜி.ஆருக்கு அஞ்சலி செலுத்தும் நாள். இந்த நாளில், தமிழ் திரைப்படத் துறையின் அனைத்து சங்கங்களும் இணைந்து, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடுவதாக அறிவித்திருக்கிறது.

எம்.ஜி.ஆரின் தன்னலமற்ற தியாகங்களை, சாதனைகளை, பணிகளை கருத்தில் கொண்டு, கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தினை மற்றொரு நாளில் வைத்துக் கொள்ளுமாறு தமிழ் திரையுலகத்தையும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:கோவையில் அதிமுக பேனர் வைக்க மறுப்பு.. போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எஸ்.பி.வேலுமணி!

ABOUT THE AUTHOR

...view details