சென்னை:பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர். இதற்காக ரயிலில் முன்பதிவுகள் தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. மேலும், பலர் பேருந்துகளில் செல்வதற்காக முன்பதிவுகள் செய்து காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் பொவதாக அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் அரசு போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15வது ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து தொழிற்சங்கங்களுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி, ஓரிரு மாதங்களில் அவற்றிற்கு உரிய தீர்வு காண வேண்டும் என கடந்த 1.1.2024 அன்று தனது அறிக்கையின் வாயிலாக அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
இது தொடர்பாக, 3.1.2024 அன்று தொழிலாளர் இணை ஆணையர் முன்பு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில், நிர்வாகத்தின் சார்பில் கால அவகாசம் கேட்கப்பட்டதாகவும், தொழிற்சங்கங்களின் சார்பில் போக்குவரத்து பணியாளர்களுக்கான 15வது ஊதிய ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைக்கான தேதி மற்றும் நீண்ட நாட்களாக வழங்கப்படாத ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு அரசுத் தரப்பில் எந்தவித உத்தரவாதமும் வழங்கப்படாத நிலையில், காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்த தொழிற்சங்கங்கள், 9.1.2024 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளன.
தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில், தொழிற்சங்கங்களை அழைத்து போக்குவரத்துத் துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல், வேலை நிறுத்தம் நடந்தாலும், பொங்கல் பண்டிகையின்போது அரசுப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் இறுமாப்புடன் அறிவித்து இருக்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இதையும் படிங்க: ஜன.11-க்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு!