சென்னை : தஞ்சாவூர் தேர் விபத்து குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் ட்விட்டரில் இரங்கல் பதிவு வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், "தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமம், அப்பர் கோயில் சித்திரைத் திருவிழாவினை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தின் போது மின் கம்பத்தில் எதிர்பாராதவிதமாகத் தேர் உரசியதால் மின்சாரம் பாய்ந்து மூன்று சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.
கூடுதல் நிவாரணம், சிகிச்சை அளிக்க கோரிக்கை: 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலியை செலுத்துவதோடு, அவர்களை இழந்து வருந்தும் அவர்தம் குடும்பத்தினருக்கும், அப்பகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
படுகாயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குக் கூடுதல் நிவாரணம் வழங்குமாறும், படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு, அவர்களுக்கு உயரிய மருத்துவச் சிகிச்சை அளித்து அதற்கான மருத்துவச் செலவை அரசே ஏற்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.