தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மீனவர்களுக்கு நீதி கிடைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்' - துணை முதலமைச்சர்

சென்னை: இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அப்பாவி மீனவர்களுக்கு நீதி கிடைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் எனத் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஓ பன்னீர்செல்வம்
ஓ பன்னீர்செல்வம்

By

Published : Oct 27, 2020, 10:32 PM IST

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து அனுமதிச் சீட்டு பெற்று 800-க்கும் மேற்பட்ட படகுகளில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.

இந்நிலையில், கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது பாட்டில்கள், கற்களைக் கொண்டு தாக்கியுள்ளனர்.

இதில் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்ற மீனவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பியுள்ளார்.

அதுமட்டுமல்லாது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 50-க்கும் மேற்பட்ட படகுகளின் வலைகளை அறுத்து எறிந்து, மீன்பிடி சாதனங்களையும் இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியுள்ளனர். இதனால் உயிர் அச்சத்தில் மீனவர்கள் கரை திரும்பினர்.

இலங்கை கடற்படையின் இந்த அத்துமீறலால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். மாநில அரசும் மத்திய அரசும் உடனடியாகத் தலையிட்டு மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடிக்க சுமுகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை மீனவர் சங்க பிரதிநிதிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.

இதற்குக் கண்டனம் தெரிவிக்கும்விதமாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், "ராமேஸ்வரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கடுமையாகத் தாக்கியிருக்கும் செயலினை வன்மையாக கண்டிக்கிறேன்.

இலங்கை கடற்படையினரின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட அப்பாவி மீனவர்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தும்" எனப் பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details