சென்னை: இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குறுதிகளில் மிக முக்கியமானதாக கருதப்படும் வாக்குறுதிகளான நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதார விலை 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் மற்றும் கரும்புக்கு ஆதார விலை டன் ஒன்றுக்கு 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் போன்றவை, இந்த ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் இல்லாதது விவசாயிகள் இடையே பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தற்போது உள்ள விலைவாசியைக் கருத்தில் கொண்டு பார்த்தால், 2021ஆம் ஆண்டு திமுகவினால் வாக்குறுதி அளிக்கப்பட்ட நெல் மற்றும் கரும்புக்கான ஆதார விலையே குறைவு என்ற நிலையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் முடிய உள்ள நிலையில், இன்னமும் 2021ஆம் ஆண்டு அறிவித்த குறைந்தபட்ச ஆதார விலையைக்கூட திமுக அரசு அறிவிக்காதது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தற்போது சாதாரண ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு 2,115 ரூபாயும், சன்ன ரக நெல்லுக்கு 2,160 ரூபாயும் வழங்கப்படுகிறது. அதேநேரத்தில், கேரளாவில் 2,820 ரூபாய் வழங்கப்படுகிறது. பேருந்துக் கட்டணம் மற்றும் மின் கட்டணம் ஆகியவற்றிற்கு எல்லாம் அண்டை மாநிலங்களை ஒப்பிடும் திமுக அரசு, இந்த விஷயத்தில் மட்டும் பாராமுகமாக இருப்பது வேதனைக்குரியது.
இதேபோன்று கரும்பினை எடுத்துக் கொண்டால், மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள டன் ஒன்றுக்கு 2,821 ரூபாய் உடன் 195 ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்பட்டாலும், குறைந்தபட்சம் டன் ஒன்றுக்கு 4,000 ரூபாய் வழங்கினால்தான் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கரும்பு விவசாயிகள் கருதுகிறார்கள்.