சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023 - 2024ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த மார்ச் 20அன்று தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து நேற்றைய முன்தினம் (மார்ச் 21) வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், 2023 - 2024ஆம் ஆண்டுக்கான வேளாண் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
இதனையடுத்து சட்டமன்ற அலுவல் கூட்டம், மார்ச் 20ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதன் முடிவில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் வருகிற மார்ச் 29ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 21ஆம் தேதி வரை நடைபெறும் எனவும், நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் நடைபெறும் எனவும் சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
மேலும் இந்த விவாதத்தின்போது சட்டமன்ற உறுப்பினர்களில் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். அதேநேரம் சட்டப்பேரவை 15 நாட்கள் காலையிலும், 7 நாட்கள் மாலையிலும் நடைபெறும் எனவும் அறிவித்தார். நேற்று (மார்ச் 22) யுகாதி என்னும் தெலுங்கு வருடப் பிறப்பை ஒட்டி, அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று (மார்ச் 23) அவை மீண்டும் கூடியது. இதில் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
இந்த சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் இது விரைவில் ஆளுநருக்கு அனுப்பப்பட உள்ளது. அதேநேரம், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கிருஷ்ணகிரியில் ஜெகன் என்ற இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்டதற்காக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.