தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணாமலையை மாற்ற சொல்வதற்கு இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது? - ஓபிஎஸ் கேள்வி - அண்ணாமலை

O.Panneerselvam: மூன்றாவது முறையாக நாட்டை ஆட்சி செய்யும் தகுதியை பாஜக பெற்றுள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2023, 9:51 PM IST

சென்னை:தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று சென்னையில் தனியார் நட்சத்திர ஹோட்டலில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன், “தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் அரசியல் நிலவரங்களைப் பற்றி பேசினோம்.

அரசியலில் ஒரு தலைவருக்கு இருக்க வேண்டியது நம்பகத்தன்மை. தமிழக மக்கள் சார்பாக ஒரு நாட்டை ஆளுகின்ற உரிமையை யாரிடம் தர வேண்டும் என்றால், ஒரு நம்பிக்கைக்கு உரியவரிடம்தான் தர வேண்டும். அந்த வகையில் ஒரு அரசியல் தலைவரின் அடிப்படை பண்பு என்பது மக்களின் நம்பகத்தன்மையைப் பெறுவது. அந்த வகையில், அந்த நம்பகத்தன்மையைப் பெற்றிருப்பவர் ஓபிஎஸ்தான். அதேபோல நம்பகத்தன்மையற்றவர் யார் என்பதை இன்று உலகமே அறிந்திருக்கும்.

அதிமுகவுடன் பாஜக கூட்டனியில் இருக்கிறோமா, இல்லையா என்பதை நீங்கள் பாஜகவைத் தான் கேட்க வேண்டும். நாங்கள் ஏற்கனவே என்ன முடிவு எடுத்தோமோ, அந்தப் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும்போது எங்களுடைய ஆதரவு யாருக்கு என்பதை தெரிவிப்போம். பாஜகவினர் என்ன செய்யவிருக்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது.

அண்ணாவையும், ஜெயலலிதாவையும் அண்ணாமலை விமர்சனம் செய்தார். அதேபோல் மறைந்த தலைவர்களைப் பற்றி பேசும்போது உண்மையான தகவல்களை பகிர வேண்டும். ஆனால், அண்ணாமலை தெரிவித்த தகவல்கள் தவறானவை. ஆனால், இப்போது ஏற்பட்டிருக்கும் பிரச்னை அண்ணாவால் வந்த பிரச்னை அல்ல.

அண்ணாமலை பேசி நான்கு நாட்கள் கழித்து அதிமுகவினர் பேசுகிறார்கள். அதற்கு என்ன காரணம்? 2026இல் நாங்கள்தான் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என அண்ணாமலை கூறியதுதான் எடப்பாடிக்கு பிரச்னை. இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்கும் சொல்கிறோம் அதிமுகவை நம்பும் மக்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள்” என கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், “மத்திய தலைமையில் இருந்து பாஜகவினர் கடந்த ஒரு மாத காலமாக தினந்தோறும் என்னிடம் பேசி வருகிறார்கள். படிப்படியாக நல்ல நிகழ்வுகள் நடக்கும். நடக்கவிருப்பது நாடாளுமன்றத் தேர்தல். அதனால் தேசிய அளவில் இருக்கும் கட்சிதான் இந்தியாவை ஆள முடியும் என்ற சூழல் இன்றைக்கு இருக்கிறது.

பாஜக இரண்டு முறை நாட்டை ஆட்சி செய்துள்ளனர். மூன்றாவது முறை ஆட்சி செய்யும் தகுதியையும் அது பெற்றுள்ளது. அதனால் பாஜக அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகு, நாங்கள் எங்கள் முடிவை அறிவிப்போம். அதிமுக - பாஜக கூட்டனி முறிவு ஒரு நாடகம் என நான் கூறவில்லை. நீங்கள்தான் கூறுகிறீர்கள்.

ஒரு நாட்டை ஆளுகின்ற தேசிய கட்சி, 16 மாநிலங்களில் ஆட்சி செய்கின்ற ஒரு தேசிய கட்சியாக இருப்பினும் பிரதமருக்கு அருகிலே அமர வைத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக உள்ளது என அறிவித்த பாஜக தலைமைக்கு, யார் தொடர் துரோகம் செய்து வருகின்றனர் என நாட்டு மக்கள் நன்றாகவே அறிவார்கள்.

பாஜக கட்சியிலிருந்து எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து மாற்றுங்கள் என்று சொன்னால், அதிமுகவில் இருப்பவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? ஒரு தேசிய கட்சியில் இருக்கும் மாநிலத் தலைவரை மாற்றுங்கள் என்று சொல்வதற்கு இவர்களுக்கு என்ன அருகதை உள்ளது என்பதை முதலில் இவர்கள் உணர்ந்து பேச வேண்டும்.

எங்களால் கூட்டணி இல்லாமல் தனித்தும் போட்டியிட முடியும். மழையின் காரணமாக மட்டும்தான் புரட்சிப் பயணம் நிறுத்தி வைக்கபட்டுள்ளது. மாவட்டச் செயலாளர்களிடம் பேசி தேதி அறிவிப்போம். அதிமுகவைப் பொறுத்தவரை, அதிமுகவின் தொண்டர்கள் யாரும் வேறு கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள்.

மேலும், ஒருங்கினைந்த அதிமுகவாக தேர்தலில் போட்டியிட்டால் மட்டும்தான் வெல்ல முடியும். நாங்கள் முதலில் இருந்தே சொல்லி வருகிறோம். ஏன் இணைய மறுக்கிறீர்கள் என எடப்பாடி பழனிசாமியைக் கேளுங்கள். ஒரே நாடு ஒரே தேர்தல் நடப்பதற்பான வாய்ப்பிருப்பதாக எங்களுக்குத் தெரியவில்லை.

பொதுமக்களும் அதிமுகவின் அடிப்படை தொண்டர்கள் அனைவரின் எண்ணமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஆனால், ஒரு சிலர் இதனைத் தடுக்கும் செயலில் இப்போது வரை ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் மக்கள்தான் முடிவெடுப்பார்கள். காவிரி விவகாரத்தில் அமைக்கபட்ட குழுக்கள் அனைத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைக்கபட்ட குழுக்கள். அந்த குழுக்கள் சொல்கின்ற உத்தரவுகளை கர்நாடக அரசு மறுக்கிறது என்றால், அரசியலைப்புச் சட்டத்தை கர்நாடக அரசு மீறுகின்றது என்பது தான் அர்த்தம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க:அதிமுக பொதுக்குழு தீர்மானம் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு!

ABOUT THE AUTHOR

...view details