குடிசைப் பகுதி, சாலை ஓரங்களில் வசிப்பவர்களுக்கு அரசு சார்பில் வீடு கட்டித்தர தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
2023 தொலைநோக்குத் திட்டத்தின்கீழ் 15 லட்சம் குடிசைப் பகுதிகளில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு குடிசைமாற்று வாரியம் மூலம் வீடு கட்டித்தர அரசு முடிவு செய்தது. இதற்காக ரூ.75 ஆயிரம் கோடி நிதி திரட்டப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன.
400 சதுரஅடி அளவிலான ஆறு லட்சம் வீடுகள் இதுவரையில் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும், படிப்படியாக 15 லட்சம் வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு குடிசைவாழ் மக்களுக்கு வழங்கி குடிசை இல்லா மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்படும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் அலுவலகத்தில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியோடு பயனாளிகளும் கூடுதல் நிதி ஒதுக்கி கட்டப்பட்டுள்ள வீடுகளின் தற்போதைய நிலை குறித்தும், இந்தத் திட்டத்தின் மூலம் நான்கு லட்சத்து 46 ஆயிரத்து 745 வீடுகள் சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
அனைவருக்கும் வீட்டு வசதித் திட்டம், அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுதல், உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் உறைவிடம் மேம்பாட்டுத் திட்டம், ஆசிய வளர்ச்சி வங்கியின் உதவியுடன் நகர்ப்புற ஏழை எளியவர்களுக்கு பேரிடர்களை எதிர்கொள்ளும் நிலைக்கத்தக்க வீட்டு வசதித் திட்டம் ஆகிய திட்டங்களின் முன்னேற்ற நிலைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.
பயனாளிகளுக்குத் தேவையான வீடுகளை விரைவாகக் கட்டி முடிக்கப்பட வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய செயலாளர் ராஜேஷ் லக்கானி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலாளர் கார்த்திகேயன், குடிசைமாற்று வாரிய இணை மேலாண்மை இயக்குநர் சுந்தரராஜன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.