குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009-யின் படி, மத்திய அரசின் அதிகாரம் பெற்ற கல்வி அமைப்பினால் நிர்ணயம் செய்யப்படும் குறைந்தப்பட்ச கல்வித் தகுதிகளைப் பெற்றுள்ள நபர்கள் மட்டுமே ஆசிரியராக நியமனம் செய்ய தகுதியானவர்கள். அதற்குரிய அங்கீகாரம் பெற்ற கல்வி அமைப்பாக மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் வரையறுத்துள்ள விதிமுறைகளின் படி மாநில அரசுகளால் மட்டுமே நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெற்றவர்களை மட்டுமே பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம் 23.8.2010 அன்று தெரிவித்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் சத்துணவுத்துறையில் பணியாற்றி வரும் சத்துணவு ஊழியர்களில் பி.எட். பட்டப்படிப்பினை முடித்தவர்களுக்கு சிறப்பு போட்டித் தேர்வு நடத்தி பணியில் சேர்க்கலாம் என அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் ஆசிரியர் தேர்வு வாரியம் 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி சத்துணவு பணியாளர்களில் ஆசிரியர் பட்டப்படிப்பினை முடித்த 341 பேர் விண்ணப்பம் செய்தனர்.
அவர்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு போட்டித் தேர்வில் 135 சத்துணவுப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர்களாக பணிநியமனம் செய்யப்பட்டனர். அப்போது, வழங்கப்பட்ட பணி நியமன ஆணையில் பள்ளிக்கல்வித்துறையின் அரசாணை எண்-181யின் படி, நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் ஐந்து ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தது.
இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள், 31.3.2019 முதல் தகுதி அற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போது பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை கணக்கெடுக்கும்போது இவர்களையும் சேர்த்துள்ளதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர். பணியில் சேர்ந்த பின்னர் தாங்கள் ஐந்து ஆண்டு முடிந்தும் பள்ளிக்கல்வித்துறையில் இருந்து ஆசிரியர் தகுதித் தேர்வினை கட்டாயம் எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று கூறவில்லை. இந்த விதிமுறையால் ஆசிரியரான சத்துணவு பணியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அலுவலர் கூறுகையில், "சத்துணவுப் பணியாளர் பணியில் இருந்து ஆசிரியர் பணிக்கு நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பணி நியமன உத்தரவிலேயே ஐந்து ஆண்டிற்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் வரும் ஆசிரியர் தகுதித் தேர்வினை எழுதி தேர்ச்சி பெற வேண்டும்" என்றார்.