சென்னையில் வாகனப்பலகைகளில் உள்ள எண்கள் விதிப்படி இல்லாமல் பல நிறங்களில், பல எழுத்து அளவுகளில் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு விதிகளை மீறி வாகனங்களில் உள்ள எண் பலகைகளை, முறையாக மாற்றி அமைக்க வேண்டும் என போக்குவரத்து காவல் துறை சில நாள்களுக்கு முன் வாகன ஓட்டிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
முக்கியமாக சென்னை முழுவதும் ஏ.என்.பி.ஆர் எனப்படும் நவீன சிசிடிவி கேமராக்கள் அமைத்து போக்குவரத்து விதிமீறல்களை காவல் துறையினர் கண்காணிக்க முடிவு செய்துள்ளனர். வாகனப்பலகை எண்கள் விதிமுறைப்படி அமைக்கப்பட்டால் மட்டுமே, நவீன கேமராவானாது விதிமீறலில் ஈடுபடும் வாகனத்தின் எண்ணை படம் பிடித்து, வாகன உரிமையாளர் யார் என்பதை வாஹன் இணையதளம் மூலம் கண்டுபிடிக்கும் வகையில் மென்பொருள் செயல்படும்.
இந்த நவீன கேமரா படம் பிடிக்கும் வாகன எண் தொடர்புடைய வாகன ஓட்டிகளின் முகவரிக்கு, போஸ்டல் மூலம் சலான் அனுப்பப்படுவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதை மேலும் நவீனப்படுத்தி கேமராவே வாகன எண்ணை அடையாளம் கண்டவுடன் மின்னஞ்சல் மூலம் வாகன உரிமையாளருக்கு சலானை மெயில் அனுப்பும் வகையிலும் கேமராவில் மென்பொருளை மேம்படுத்த உள்ளதாக போக்குவரத்து உயர் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.