சென்னை:இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ள 29 தமிழ்நாட்டு மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
சிங்களக் கடையார்களின் அட்டூழியங்கள்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டு மீனவர்கள் 29 பேரை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்து சிறைப்படுத்தியிருப்பது அந்த மீனவர்களின் குடும்பத்தினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும், உடமைகள் பறிக்கப்படுவதும், சுட்டுக்கொலை செய்யப்படுவதுமென சிங்களக்காடையர் கூட்டத்தின் கொடுங்கோல் போக்குகளும், அட்டூழியங்களும் இன்றுவரை தொடர்ந்து வருவது ஆளும் அரசுகளின் கையாலாகத்தனத்தையே காட்டுகிறது.
கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம், தங்கச்சி மடம், பாம்பனைச் சேர்ந்த மீனவர்கள் 29 பேரை எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்திருப்பதோடு மட்டுமல்லாது, அவர்களது 5 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. இதுவரை எத்தனையோ இலங்கை மீனவர்கள் எல்லைத்தாண்டி இந்திய எல்லைக்குள் வந்திருக்கிறார்கள்.
சிங்களப் பேரினவாத அரசின் தாக்குதல் தமிழர்களின் மீதான வன்மத்தின் வெளிப்பாடு
அவர்களில் ஒருவரைக்கூட இந்தியக் கடற்படையினர் தாக்கியதாகவோ, தண்டித்ததாகவோ, இழிவாக நடத்தியதாகவோ செய்தியில்லை. ஆனால், தமிழ்நாட்டு மீனவர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்தி வரும் தொடர் வன்முறைத்தாக்குதல்களும், தமிழர் படகுகளைப் பறித்து அரசுடமையாக்கிக் கொள்ளும் அநீதியும், வலையறுப்பு நிகழ்வுகளும், மீன்பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களை நடுக்கடலிலே வைத்து அடிப்பது, உதைப்பது, நிர்வாணப்படுத்துவது, கடலுக்குள் தள்ளி விடுவது, ஆயுதத்தைக் கொண்டு துன்புறுத்துவது, அவர்களது உடமைகளைப் பறித்துக்கொள்வது, மீன்களைக் கடலிலே வீசியெறிவது, வலைகளை அறுத்தெறிவது, படகுகளைச் சேதப்படுத்துவது, மீனவர்களைச் சிறைப்பிடிப்பது, துப்பாக்கிச்சூடு நடத்துவது எனச் சிங்கள ராணுவம் அரங்கேற்றிவரும் கொடுமைகளும் சொல்லி மாளக்கூடியதல்ல.