சென்னை:நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு அரசின் பொங்கல் தொகுப்புக்காக கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கு அரசு நிர்ணயித்துள்ள விலையில், பாதியளவு மட்டுமே வழங்கப்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது.
கரும்பு ஒன்றுக்கு ரூ.33 என்று அறிவித்துவிட்டு, கொள்முதலின்போது 15 முதல் 20 ரூபாய் வரை மட்டுமே அரசு வழங்குவது, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுஞ்செயலாகும். நடப்பாண்டு பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படமாட்டாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததால், அதனை நம்பி அதிகளவில் செங்கரும்பினை விளைவித்த விவசாயிகள் மிகுந்த நட்டமடையும் நிலைக்கு ஆளாகி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாண் பெருங்குடி மக்களின் கடும் எதிர்ப்பினை அடுத்து, வேறு வழியின்றி பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. மேலும், கரும்பு கொள்முதலை அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்டங்களுக்குள்ளேயே செய்திட வேண்டும் எனவும், கரும்பு ஒன்றுக்கு ரூ.33 கொள்முதல் விலையாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.
ஆனால், கரும்பு ஏற்றுகூலி, இறக்கு கூலி, வாகன வாடகை என்று கூறி கரும்புக்கென அரசு நிர்ணயித்த 33 ரூபாயில், பாதி அளவிற்கு எடுத்துக்கொண்டு வெறும் 15 முதல் 20 ரூபாய் அளவிற்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் வழங்குவதாக கரும்பு விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.