சென்னை:வள்ளுவர் கோட்டத்தில் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் மற்றும் பைக் டாக்சியை தடை செய்யக் கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று (ஏப்ரல் 9) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “2013ஆம் ஆண்டில் ஆட்டோ மீட்டர் கட்டணம் சீரமைப்பு நடைபெற்றது. அதே மீட்டர் கட்டணத்திற்கு இன்று ஆட்டோ ஓட்டுநர்கள் எப்படி ஆட்டோவை ஓட்ட முடியும்?
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இன்று வேறு வேலை இல்லை. தமிழ்நாட்டில் இன்று வட இந்தியர்களுக்கு ஆதரவளித்து பேசுபவர்கள், எங்களையும் ஐயோ பாவம் என்று சொல்லுங்கள். சுமாட்டோ, சுவிக்கி போன்ற நிறுவனங்களை அரசே முன் வந்து நடத்த வேண்டும். மேலும் சொந்த வாகனம் இருந்தாலும், இன்று ஊபர் மற்றும் ஓலா போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கீழ்தான் தமிழ்நாட்டு மக்கள் வேலை செய்ய முடிகிறது.
தற்போது லிட்டருக்கு 103 ரூபாய் வரை டீசல், பெட்ரோல் ஆகியவற்றின் விலை ஏறிய பிறகு, அதே கட்டணத்திற்கு எங்களால் ஆட்டோவை இயக்க முடியாது. இது ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கிறது. டாஸ்மாக்கை மட்டுமே முழுமையாக நம்பி இருக்கும் இந்த அரசு, சுமாட்டோ, சுவிக்கி போன்ற நிறுவனங்களை தமிழ்நாடு அரசே முன்னின்று நடத்தினால் நாட்டின் வருவாயும், நாட்டின் வளமும் பெருகும். வரி கட்டி வாழ முடியவில்லை.