சென்னை:மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேருவதற்கு, கடந்த 2021ஆம் ஆண்டு கியூட் என்னும் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது. இதன்படி, இந்த ஆண்டுக்கான கியூட் நுழைவுத் தேர்வு மே 21ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்தது.
இதன் அடிப்படையில், கியூட் நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்கியது. இதில் 10ஆம் வகுப்பு மதிப்பெண் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது. இதனால் கியூட் நுழைவுத்தேர்வுக்கு தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.
ஏனென்றால், கடந்த 2021ஆம் ஆண்டு கரோனா ஊரடங்கு காரணமாக 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கப்பட்டு, மதிப்பெண்கள் வழங்கப்படவில்லை. மேலும் 2021ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள்தான், இந்த ஆண்டு 12ஆம் வகுப்பு முடிக்க உள்ளனர். இவர்களே மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சேருவதற்கு நடத்தப்படுகின்ற கியூட் நுழைவுத்தேர்வை எழுத உள்ளனர்.
எனவே 10ஆம் வகுப்பு மதிப்பெண் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்கிற விதி முறையில் தளர்வு வழங்கினால் மட்டுமே, தமிழ்நாட்டு விண்ணப்பதாரர்களால் தேர்வு எழுத முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் தேசிய தேர்வு முகமை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், ‘பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்விற்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி வெளியிடப்பட்டது என்றும், அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து வர பெற்ற கோரிக்கையில் கரோனா தொற்றின் காரணமாக 2021ஆம் ஆண்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படாமல் தேர்ச்சி என மட்டும் வழங்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
எனவே மதிப்பெண் வழங்கப்படவில்லை என தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் அரசாணையின் அடிப்படையில், தமிழ்நாடு பாடத்திட்டத்தில் 2021ஆம் ஆண்டில் 10ஆம் வகுப்பு படித்த மாணவர்கள், தங்களின் மதிப்பெண்களை பதிவு செய்யத் தேவையில்லை என என்டிஏ கூறியுள்ளது. மேலும் பிப்ரவரி 9 அன்று தொடங்கிய விண்ணப்பப் பதிவு, வருகிற மார்ச் 12 வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதையும் படிங்க:CUET Exam: கியூட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் தமிழக மாணவர்களுக்கு சிக்கல்!