சென்னை: ஐஐடி தேசிய தொழில்நுட்ப மேம்பாடு கற்றல் திட்டத்தின் மூலமாக கேட் தேர்வுக்குத் தயார்படுத்தும் வகையில் 'NPTEL GATE' என்ற பெயரில் கட்டணமின்றி ஆன்லைன் போர்ட்டல் தொடங்கப்பட்டுள்ளது. என்பிடெல் (NPTEL) என்பது ஐஐடிக்கள், ஐஐஎஸ்சி ஆகியவற்றின் கூட்டுமுயற்சியில், கட்டணமின்றி ஆன்லைன் சான்றிதழ் படிப்புகளை வழங்கும் திட்டமாகும். கேட் தேர்வுக்குத் தயார்ப்படுத்தும் போர்ட்டலை பின்வரும் இணையத் தொடர்பு மூலம் பயன்படுத்தலாம் - https://gate.nptel.ac.in.
ஐஐடிக்கள், ஐஐஎஸ்சி ஆகியவற்றில் முதுநிலைப்படிப்பு அல்லது பிஹெச்.டி.யில் சேரவும், ஏனைய புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கவும் நாடு தழுவிய அளவில் நுழைவுத் தேர்வாக பொறியியல் பட்டதாரி தகுதித் தேர்வு (GATE) இருந்து வருகிறது. பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களும் கேட் மதிப்பெண் அடிப்படையிலேயே வேலைக்கு நபர்களை நியமிக்கின்றன.
என்பிடெல் வசமுள்ள 2,400க்கும் மேற்பட்ட தலைப்புப் பக்கங்களில் இருந்து பொறியியல், அறிவியல் ஆகியவற்றில் தற்போதைய பாடத்திட்டங்களுக்கு ஏற்ப பாடத் தொகுப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும். அத்துடன் ’’கேட்’’ பாடத் திட்டத்தின் அடிப்படையில் வீடியோ தீர்வுகள், செய்முறைத்தேர்வுகள், ஆன்லைன் உதவிகள் ஆகியவை புதிய போர்ட்டல் மூலம் வழங்கப்படும்.
இதுகுறித்து, சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி கூறும்போது, "கேட் தேர்வு என்பது மாணவர் ஒருவர் இளங்கலைப்படிப்பைப் படிக்கும்போது அவர் பெற்ற அடிப்படை அறிவை சோதிக்கிறது. கேட் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு உயர்படிப்பு, வேலைவாய்ப்பு ஆகிய இரு வாய்ப்புகளும் கிடைக்கின்றன. என்பிடெல் தனது பாடத்தொகுப்புகளை வழங்கி, மாணவர்களைத் தயார்படுத்த உதவுகிறது. அத்துடன் அவர்களுக்கு சமவாய்ப்பை வழங்கி எல்லோரும் போட்டிக்குத் தயார்படுத்தும் சூழலை உருவாக்குகிறது’’ எனக் கூறினார்.
கேட் தேர்வுக்கான பிரத்யேக இணையதளம் குறித்து சென்னை ஐஐடி என்பிடெல் ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணா பசுமார்த்தி, ’’ பாடங்கள் குறித்த விவாதக் களங்களில் பங்கேற்கும் பல மாணவர்கள், கேட் தேர்வுக்கு இதில் உள்ள பாடத் திட்டங்களில் இருந்து NPTEL இணையதளத்தில் இருந்து தெரிந்துகொள்வார்கள். கேட் தேர்வுக்கு தயாராவதற்கான உதவிகளைப் பெறமுடியும்.