சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், "திமுக ஆட்சியில் தான் முதன் முதலாக என்பிஆர் கணக்கெடுப்புப் பணி நடத்தப்பட்டது. 2010ஆம் ஆண்டு இருந்த நடைமுறையில் இருந்து தற்போது 2020ஆம் ஆண்டு மூன்று புதிய கேள்விகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த கேள்விகள் தான் இஸ்லாமியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த அச்சத்தை நீக்குவதற்கு, மத்திய அரசிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு இதுவரை பதில் வராததால், தற்போது வரை என்பிஆர் பணி தமிழ்நாட்டில் தொடங்கவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. என்பிஆர் கணக்கெடுப்பு குறித்த அறிவிப்பு இல்லை" என்றார்.