சென்னை: மருத்துவப்படிப்புகளில் சேரும் மாணவர்களிடம் தனியார் மருத்துவக்கல்லூரியில் அதிகப்பணம் வசூலிப்பதை தடுப்பதற்காக கல்லூரிக்கான முழு கட்டணத்தையும் கலந்தாய்வின் பொழுதே செலுத்தும் வகையில் புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது என மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்தார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு, 'தனியார் மருத்துவக்கல்லூரியில் இடங்களைத்தேர்வு செய்து சேரச் செல்லும் மாணவர்களிடம் அதிக கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது எனப்புகார் வருகிறது. அதனைத்தடுப்பதற்காக இந்தாண்டு முதல் மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்த உடன் மாணவர்கள் கல்லூரிக்கான அனைத்து கட்டணங்களையும் சேர்த்து கலந்தாயின்பொழுதே செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவக்கல்வி மாணவர் சேர்க்கை குழுவிடம் கட்டணத்தை செலுத்திய மாணவர்கள் அவர்களுக்குரிய ஒதுக்கீட்டு ஆணையை மட்டும் பெற்றுக்கொண்டு கல்லூரியில் சேர்ந்துகொள்ளலாம். அந்தக் கட்டணத்தில் கல்வி கட்டணம், பேருந்து கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களும் சேர்த்து வசூல் செய்யப்படும்.
தேசிய மருத்துவ ஆணையம் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் 50 விழுக்காடு இடங்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கட்டணம் வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை மருத்துவக்கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணய குழுவிடம் அளித்தோம். இந்த உத்தரவின் மீது தனியார் கல்லூரிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர்.
நடப்பாண்டில் இளநிலை மருத்துவப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்குரிய கலந்தாய்வினை ஆன்லைன் மற்றும் நேரடியாக நடத்தவும் தயார் நிலையில் உள்ளோம். தேசிய தேர்வுமுகமையிடமிருந்து மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் இன்னும் தங்களுக்கு வந்து சேரவில்லை.