தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்று 731 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகள் ஆண்டுதோறும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிமுறைகளின்படி விண்ணப்பம் செய்து அனுமதி பெற வேண்டும். அதன் அடிப்படையிலேயே தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மாணவர்கள் சேர்ப்பதற்கு அங்கீகாரம் வழங்கும்.
2020 - 21ஆம் கல்வியாண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கு விரும்பும் ஆசிரியர் பட்டப்படிப்பினை நடத்தும் கல்லூரிகள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தேசிய ஆசிரியர் கவுன்சில் அறிவித்தது. இதையடுத்து, தமிழ்நாட்டிலுள்ள ஆசிரியர் பட்டப்படிப்பை வழங்கும் கல்வியியல் கல்லூரிகள் விண்ணப்பித்தனர். இதனை பரிசீலனை செய்த தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் தென்மண்டல குழு குறைகளைச் சுட்டிக்காட்டி 21 நாள்களுக்குள் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுரை வழங்கியது.
அதன்படி, கோயம்புத்தூர், வேலூர், சைதாப்பேட்டை ஆகிய இடங்களில் செயல்படும் மூன்று அரசு பி.எட்., கல்லூரி மற்றும் அரசு உதவிப் பெறும் கல்வியியல் கல்லூரி, தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரி என 41 கல்லூரிகளுக்கு ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என இறுதி எச்சரிக்கையுடன் கடிதம் அனுப்பியுள்ளது. மேலும், 13 கல்லூரிகளில் வழங்கப்பட்டு வரும் பி.எட்., படிப்பிற்கான அங்கீகாரத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் பதிவாளர் பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, தேசிய ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தங்களுக்கு இன்னும் எந்தவித தகவலையும் தெரிவிக்கவில்லை. தேசிய ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அங்கீகாரம் வழங்கினால் மட்டுமே தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழகம் மாணவர்களைச் சேர்ப்பதற்கு அனுமதி வழங்கும் என்றார்.
இதையும் படிங்க:விண்ணப்பிக்கும் அனைவருக்கும் 17ஆம் தேதி முதல் உடனுக்குடன் இ-பாஸ் - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு!