சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் (JACPTTA) செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் சேசுராஜா பேசுகையில், கடந்த 12 ஆண்டுகளாக அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, கணினி, தையல், இசை, ஓவியம், வாழ்வியல் திறன் ஆகிய பாடப் பிரிவுகளில் தொகுப்பூதியத்தில் பகுதி நேர ஆசிரியர்களாக பலர் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று திமுக அறிவித்தது ஆனால், தற்போது வரை அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆசிரியர்களை பணி நிரந்தரத்தை நடைமுறைப்படுத்தாததால், திமுக ஆட்சிக்கு வந்து 3 முறை போராட்டம் நடத்தி உள்ளோம். அரசு தரும் ரூபாய் 10 ஆயிரம் ஊதியத்தை வைத்து எங்களால் குடும்பத்தை நடத்த முடியவில்லை" என்றனர்.
இதையும் படிங்க:காத்திருப்போர் பட்டியலில் மதுராந்தகம் டி.எஸ்.பி - பின்னணி என்ன?
தொடர்ந்து பேசிய அவர், பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற எண்ணத்தில் இருந்த நிலையில், தற்போது வரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், மன உளைச்சலில் பல ஆசிரியர்கள் உள்ளனர். எங்களை மாற்றான் தாய் பிள்ளைகளாக அரசு பார்க்கிறது" என்று வேதனை தெரிவித்தனர்.