தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுகள் - எவற்றுக்கு அனுமதி? - சென்னை அண்மைச் செய்திகள்

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு நாளை மறுதினத்துடன் (ஆக. 23) முடிவடைய உள்ள நிலையில், வருகின்ற செப்டம்பர் 6ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை கடைபிடிக்கப்பட வேண்டிய பல்வேறு நெறிமுறைகள் மற்றும் தளர்வுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஆக.21) அறிவித்துள்ளார்.

ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுகள் அறிவிப்பு
ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுகள் அறிவிப்பு

By

Published : Aug 21, 2021, 7:43 PM IST

Updated : Aug 21, 2021, 8:38 PM IST

தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு நாளை மறுதினம் (ஆக. 23), காலை 6 மணியுடன் முடிவடைகிறது.

இதனைத் தொடர்ந்து மாவட்டவாரியாக நோய் தொற்றுப் பரவலின் தன்மை, அண்டை மாநிலங்களில் நோய் தொற்றின் தாக்கம், ஊரடங்கு கட்டுப்பாடுகள், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு, கரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளின் செயலாக்கம் ஆகியவை குறித்த ஆலோசனைக் கூட்டம், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (ஆக. 21) நடைபெற்றது.

இந்நிலையில் ஆலோசனைக் கூட்டத்தில் அலுவலர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில், நடைமுறையில் உள்ள கோவிட்-19 நோய் பரவல் தடுப்பிற்கான கட்டுப்பாடுகளை, வருகின்ற செப்டம்பர் 6ஆம் தேதிவரை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்
  • வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி முதல், 9 முதல் 12ஆம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கு, சுழற்சி முறையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வகுப்புகள் செயல்படும். பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
  • உயர் வகுப்புகள் செயல்படுவதை கவனித்து அதன் அடிப்படையில், 1 முதல் 8ஆம் வகுப்புவரையிலான மாணவர்களுக்கான வகுப்புகளை வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு அறிவிக்கப்படும்.
  • அனைத்து கல்லூரிகளிலும் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி முதல், சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையின் செயலாளர்கள் வழங்குவார்கள். கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
  • அனைத்து பட்டயப் படிப்பு வகுப்புகள் (Diploma Courses, Polytechnic Colleges) சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
  • நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, 50 சதவீத பார்வையாளர்களுடன் நாளை மறுதினம் முதல் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படும். பணியாளர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டிருப்பதை, திரையரங்க உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
  • கடற்கரைகளில் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர். இந்த பகுதிகளில் அமைந்துள்ள கடைகளின் பணியாளர்கள், சிறு வியாபாரிகள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட மாநகராட்சி/மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
  • இதுவரை இரவு 9 மணிவரை அனுமதிக்கப்பட்ட அனைத்து கடைகள் மற்றும் செயல்பாடுகளும், நாளை மறுநாள் (ஆக.23) முதல் இரவு 10 மணிவரை, நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
  • தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் அனைத்தும் 100 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுவர்.
  • அங்கன்வாடி மையங்கள் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மதிய உணவு வழங்குவதற்காக செயல்பட அனுமதிக்கப்படும். அங்கன்வாடி மைய ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதனை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.
  • ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்து நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி இயக்க அனுமதிக்கப்படும்.
  • நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி மழலையர் காப்பகங்கள் (Creche) செயல்பட அனுமதிக்கப்படும். மழலையர் காப்பகங்களின் பொறுப்பாளர்கள், பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
  • நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிகளுக்காக மட்டும் 50 சதவீத பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். பயிற்சியாளர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட பயிற்சி பெறுபவர்கள் ஆகியோர் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.
  • தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், மகளிர் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் மூலம் நடத்தப்படும் வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.

செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் பணியாளர்களும், தடுப்பூசி செலுத்தியிருப்பதை தொடர்புடைய நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கடைகள், பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகள் தவறாமல் பின்பற்றப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவை பின்வருமாறு:

  • கடைகளின் நுழைவு வாயிலில், கிருமி நாசினி (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, தானியங்கி உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  • கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
  • அனைத்து கடைகளும், உரிய காற்றோட்ட வசதியுடன் செயல்படுவதோடு, கடைகளில், தகுந்த இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.
  • கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, இரு நபர்களுக்கிடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.
  • மேற்படி விதிமுறைகளைப் பின்பற்றாமலும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்தும் செயல்படும் வணிக/இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேற்கண்ட நெறிமுறைகள் கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு - தியேட்டர்களுக்கு அனுமதி

Last Updated : Aug 21, 2021, 8:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details