இது குறித்து அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுதுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ஆன்லைனில் ஜனவரி 2, 3ஆம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்.
11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் மார்ச் 2020, ஜூன் 2020 பருவங்களில் நடைபெறும் பொதுத்தேர்வுகளைப் பழைய பாடத்திட்டத்திலேயே எழுதலாம்.
கடந்த ஆண்டு நேரடித் தனித்தேர்வராக 11, 12ஆம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சிபெறாத தேர்வர்கள் அனைவரும் மீண்டும் எழுதுவதற்கு சேர்த்து விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அரசுத் தேர்வுத் துறை சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
தனித்தேர்வர்கள் தாங்கள் எந்தக் கல்வி மாவட்டத்திலிருந்து விண்ணப்பிக்கிறார்களோ, அந்த மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையத்திற்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை சேவை மையங்களின் விவரத்தை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.