சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையரான சந்தீப் ராய் ரத்தோர் நேற்று (செப்.12) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாடு காவல்துறையின் சொந்த முயற்சியால் இன்று வீரா வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. சாலை விபத்துகளில், சேதமடைந்த வாகனங்களில் சிக்கிக் கொள்பவர்களின் உயிரைக் காக்க, தனித்துவமான மீட்பு வாகனம் உருவாக்கப்பட்டு உள்ளது.
விபத்தில் சிக்கியவர்களை காரில் இருந்து மீட்க முடியாத போது வீரா வாகனம் மூலம் கார் கதவுகள் அறுக்கப்பட்டு, அங்கேயே முதலுதவி சிகிச்சை வழங்கப்படும். பின்னர் மீட்கப்பட்ட அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு இந்த வாகனம் உதவுகிறது. கடந்த ஆண்டு மட்டும் 364 பேர் விபத்தில் உயிர் இழந்து இருக்கிறார்கள்.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் வீரா வாகனம் இந்த ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி வரை 341 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டை ஒப்பீடும் போது இந்த ஆண்டு விபத்து எண்ணிக்கை குறைந்துள்ளது. தமிழ்நாடு தீயணைப்பு துறையிடம் இல்லாத வசதிகள் கூட இந்த வாகனத்தில் இருக்கிறது. ஈ.சி.ஆர் உள்ளிட்ட எந்த இடங்களில் விபத்து அதிகமாக நடைபெறுகிறதோ, அந்த இடங்கள் முழுமையாக ஆராயப்பட்டு, அதன்பின் அதற்கு ஏற்றார் போல் வீரா வாகனம் அங்கு நிறுத்தப்படும்.
விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் வீரா வாகனம் இன்னும் பத்து முதல் 15 நாட்களில் எந்தெந்த பகுதிகளில் சிக்னல்கள் வேலை செய்யாமல் இருக்கிறதோ, அது முழுமையாக சரி செய்யப்படும். சென்னை மெட்ரோ, குடிநீர் வடிகால் வாரியம், கழிவுநீர் வாரியம் சார்பில் சென்னை முழுவதும் பரவலாக பணிகள் நடைபெற்று வருவதால் சிக்னல்கள் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் 277 ஆட்டோ சிக்னல்கள் உள்ளன.
பனையூரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி குளறுபடிகள் தொடர்பாக விசாரணை நடைபெற்றது. சைபர் கிரைம் தொடர்பாக பொதுமக்களுக்கு தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பான நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்து வரக்கூடிய நிலையில், அதற்கு ஏற்றார் போல் மோசடியும் வளர்ந்து வருகிறது.
தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். சைபர் கிரைம் மோசடிகளை கண்காணிப்பது உள்ளிட்டவைகள் தொடர்பான சரியான சிஸ்டம் நம்மிடம் உள்ளது. சைபர் கிரைம் அதிகாரி பெங்களூரு சென்று நைஜீரியாவை சேர்ந்த ஒரு குழுவை கைது செய்துள்ளார். அவரிடம் இருந்து செல்போன்கள் மற்றும் கட்டு, கட்டாக பணம் மீட்டெடுக்கப்பட்டு உள்ளது.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான நடிகையின் குற்றச்சாட்டு குறித்து, வளசரவாக்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தில் இருப்பதால் வெளியே எதுவும் சொல்ல முடியாது. தற்போது மீடியா முன்பு எதையும் சொல்ல முடியாது.
வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டும் தான் போராட வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் நபர்கள் சாலை மறியலில் ஈடுபடுவார்களா? இல்லையா? என்பது சம்பவ இடத்தில் தான் தெரியும். இருப்பினும் அப்படி நடைபெற்றாலும், போக்குவரத்து மாற்றத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க:சென்னை உயர் நீதிமன்ற 5 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு!