சென்னை:வியாசர்பாடி கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் விவேக். திருமணமாகி தேவபிரியா என்ற மனைவியும், ஒன்றரை வயதில் மகளும் உள்ளனர். அயனாவரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் விவேக், எழும்பூரில் உள்ள இணைய சேவை நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் இண்டர்நெட் வழங்கும் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் வழக்கம் போல் வேலைக்கு வந்த விவேக்கை சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு இளைஞர் கத்தியால் குத்தினார். தப்ப முயன்ற விவேக்கை, அந்த நபர் விரட்டி வெட்டியதாக கூறப்படுகிறது. அதிர்ச்சி தாங்காமல் ரத்தம் சொட்ட சொட்ட மாடியில் இருந்து தப்பியோடி வந்த விவேக் மயங்கி விழுந்து துடிதுடித்து உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து அருகில் இருந்தவர்கள் எழும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் திருவல்லிக்கேணி துணை ஆணையர் சேகர் தேஷ்முக் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
கொலை செய்துவிட்டு மாடிவிட்டு மாடி தாவி அருகில் உள்ள கட்டடத்தின் மோட்டார் அறையில் பதுங்கி கொலையாளி தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. கொலையாளியை சுற்றி வளைத்த போலீசார் மேலும் தப்பிக்க முடியாத வகையில் சுற்றிவளைத்தனர். போலீசார் நெருங்கியதை கண்டதும், தன்னை பிடிக்க வந்தால் கழுத்தை அறுத்துகொண்டு தற்கொலை செய்து கொள்வதாக இளைஞர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
பின்னர் இளைஞரின் மாமாவை வரவழைத்த போலீசார், சமாதானம் செய்து அவனை பிடித்தனர். கைது செய்யப்பட்ட இளைஞரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
கைதானவர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முத்துகுமார் என்கிற சந்தோஷ் என்பது தெரிய வந்தது. விவேக் பணியாற்றும் நிறுவனத்திற்கு வேலையாட்கள் சப்ளை செய்யும் நிறுவனத்தில் சந்தோஷ் பணியாற்றியதாகவும், பைக்ரேசில் ஆர்வம் கொண்ட சந்தோஷ் பல நேரங்கலில் வேலையை பாதியில் விட்டுவிட்டு நண்பர்களுடன் ஊர் சுற்ற செல்வதை வழக்கமாக கொண்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் இதேபோல் பணியின் இடையிலேயே சீக்கிரமாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என சந்தோஷ் கேட்டதாகவும், பணி முடிக்காமல் வீட்டிற்கு செல்லக் கூடாது என விவேக் திட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், சந்தோஷின் குடும்பத்தாரை விவேக் ஆபாசமாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து விவேக் அலுவலகத்தில் தெரிவித்த நிலையில், அதிகாரிகள் சந்தோஷை சவுகார்பேட்டைக்கு பணிமாற்றம் செய்து உத்தரவிட்டனர். இதனால் ஏற்பட்ட கோபத்தில், அலுவலகம் வந்த விவேக்கை, ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் கூறினர். அதேநேரம் சந்தோஷ்க்கு மது, கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கம் இருந்தாக போலீசார் தெரிவித்தனர்.
இதனிடையே, கொலையை தடுக்க வந்த சக ஊழியர்கள் அகஸ்டின் உள்ளிட்டோரையும் சந்தோஷ் கத்தியால் தாக்கி உள்ளான். படுகாயம் அடைந்த அகஸ்டினை போலீசார் அழைத்துச் சென்ற போது, அவர்தான் கொலையாளி எனக் கருதிய விவேக்கின் உறவினர்கள் உள்ளிட்டோர் அவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:சிறந்த விருந்தோம்பலுக்காக 'ராமோஜி ஃபிலிம் சிட்டிக்கு' சிஹாரா விருது!