தமிழ்நாடு

tamil nadu

பள்ளி, கல்லூரி திறப்பு குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை - தமிழ்நாடு அரசு பதில்!

By

Published : Aug 25, 2020, 1:55 PM IST

சென்னை: மாநிலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து, இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை என தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Not feasible to reopen schools and collages, state report, case disposed MHC
Not feasible to reopen schools and collages, state report, case disposed MHC

கரோனா பரவல் காரணமாக 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.

காலாண்டு (40%) மற்றும் அரையாண்டு (40%) தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் வருகைப்பதிவின் (20%) அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு, மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால், பள்ளிகளில் படிக்காமல் நேரடியாக பத்தாம் வகுப்புக்குத் தேர்வு எழுத ஹால் டிக்கெட் பெற்றிருந்த தனித்தேர்வர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கக் கோரி, கோவையைச் சேர்ந்த வருண்குமார் என்ற தனித்தேர்வரின் தந்தை எஸ்.பாலசுப்ரமணியன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், '11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையும், பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையும் வரும் 24ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தனித் தேர்வர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்காமல் பாரபட்சம் காட்டுவதால், அவர்கள் ஓராண்டை இழக்க நேரிடும் வாய்ப்புள்ளது.

தனித்தேர்வர்களின் முடிவுகளை வெளியிடும் வரை, மேல் நிலைப் பள்ளி மாணவர் சேர்க்கையையும், பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையையும் ஒத்தி வைக்கவேண்டும். தனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்து, மதிப்பெண் பட்டியலை வழங்க உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்வித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முனுசாமி, 'தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது தொடர்பாக அரசு இதுவரை எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை.

தனித்தேர்வர்களுக்கான தேர்வு செப்டம்பர் மாத இறுதியில் நடக்கிறது. அதற்கான முடிவுகள் அக்டோபர் முதல் இரண்டு வாரங்களில் வெளியாகிவிடும். அதற்குள் மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டுவிடுமா என்பதும் உறுதியாக தெரியவில்லை' என்று தெரிவித்தார்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு, வருகைப்பதிவு அடிப்படையில் தேர்ச்சி வழங்கியதுபோல தனித்தேர்வர்களுக்கு வழங்க முடியாது எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details