தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முறையான சாலை வசதி இல்லாமல் தாழ்தள பேருந்தை இயக்க முடியாது: போக்குவரத்துத்துறை விளக்கம் - Department of Transport

தமிழ்நாட்டில் சாலை வசதிகளை மேம்படுத்தாமல் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் தாழ்தள பேருந்துகளை இயக்குவதற்கு சாத்தியமில்லை என்று போக்குவரத்துத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முறையான சாலை வசதி இல்லாமல் தாழ்வுதள பேருந்தை இயக்க முடியாது
முறையான சாலை வசதி இல்லாமல் தாழ்வுதள பேருந்தை இயக்க முடியாது

By

Published : Mar 1, 2023, 10:56 AM IST

சென்னை: தமிழ்நாடு போக்குவரத்து கழகங்களுக்கான பேருந்துகள் கொள்முதல் செய்ய விடப்பட்ட டெண்டரில், மாற்றுத் திறனாளிகள் அணுகும் தாழ்தள பேருந்துகளையும் கொள்முதல் செய்ய உத்தரவிட கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நேற்று (பிப்.28) உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஸ்வரன், "சென்னை முழுவதும் மொத்தம் 186 இடங்களில் ஆய்வு செய்ததில் கோயம்பேடு, திருமங்கலம் மற்றும் கொளத்தூர் பகுதியில் மெட்ரோ பணிகளால் பேருந்தை இயக்குவதில் சிறு பாதிப்பு உள்ளது. மேலும் தாழ்வுதள பேருந்தை இயக்குவதில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

மாற்றுத்திறனாளுகளுக்காக பேருந்தை நிறுத்துவதால் காலதாமதம் ஏற்படவில்லை. அரசு இதுவரை 10 சதவிகித
பேருந்து கொள்முதல் செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குறைந்த எண்ணிக்கையில் பேருந்தை கொள்முதல் செய்தால் மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து வசதி அடுத்த 50 ஆண்டுக்கு பின் தான் நடைமுறைக்கு வரும். நடைமேடைகள் சரியாக இல்லை.

மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியில் எப்படி காத்திருக்க முடியும். பேருந்தை நிறுத்தினால் காலதாமதம் ஏற்படும் என்பதை ஏற்க முடியாது. அதிகமாக 30 விநாடியில் (1/2 நிமிடம்) பயணிகளை ஏற்றலாம். சென்னையில் 173 இடங்களில் அனைத்து வகையான பேருந்தையும் இயக்குவதில் பாதிப்பு இல்லை. அதனால், 100 சதவிகித தாழ்வுதள பேருந்தை கொள்முதல் செய்து இயக்க உத்தரவிட வேண்டும்" என தெரிவித்தார்.

தாழ்வு பேருந்து சாத்தியமில்லை:போக்குவரத்து கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "மாற்றுத்திறனாளிகளுக்காக கொள்முதல் செய்யப்பட்ட 442 பேருந்தில் 402 பேருந்துகள் சென்னையில் இயக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் 400 பேருந்துகள் இயக்கப்படுகிறது. கடந்த 14 ஆண்டுகளில் தாழ்வுதள பேருந்து தமிழ்நாட்டில் இயக்கப்படவில்லை. அசோக் லைலேண்ட் மட்டுமே உற்பத்தியாளர் என்பதால் முழுமையான பேருந்துகள் கொள்முதல் செய்ய 2 ஆண்டுகள் ஆகும்.

மேலும், ரூ.1,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும் சரியான பேருந்து நிலையம் மற்றும் சாய்வுதளம் வசதி இல்லாமல் தமிழ்நாட்டில் நடைமுறை சாத்தியம் இல்லை. கொள்முதல் செய்யப்பட்ட 37 சதவிகித பேருந்தில் 10 சதவிகிதம் மட்டுமே தற்போது இயக்கப்படுகிறது. அதில் 90 சதவிகிதம் பேருந்துகள் சென்னையில் இயக்கப்படுகிறது. ஒவ்வொரு முறை கொள்முதல் செய்யப்படும் போது, தாழ்வுதள பேருந்துகளை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2000 ஆண்டு முதல் தாழ்வுதள பேருந்து இயக்கத்தை கட்டாயமாக்கியுள்ள டெல்லியில் இதுவரை 66 சதவிகிதம் மட்டுமே இயக்கப்படுகிறது. பெங்களூர், ஹரியானா மாநிலங்களில் 100 சதவிகிதம் சாதாரண பேருந்துகளே இயக்கப்படுகிறது.

மேலும், தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளாக இயக்கப்படும் பழுதடைந்த பேருந்துகளில் 2,000 பேருந்துகளை வரும் ஏப்ரல் மாதம் முதல் கைவிட அரசு முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதால், தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும்" தெரிவித்தார்.

நடைமுறை சிக்கல்கள்:இதையடுத்து, பேருந்துகளை இயக்குவதில் எதிர்கொள்ளும் பிரச்சனை என்ன? என்பதை ராமச்சந்திரன் என்ற ஓட்டுநரை நேரில் அழைத்து நீதிபதிகள் விளக்கம் கேட்டனர். "அதற்கு ஒட்டுநர், தாழ்வு பேருந்துகளை வளைவுகளில் திருப்ப முடியாது. பயணிகளை ஏற்றுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. சாதாரண பேருந்தைகளை இயக்குவதில் எந்த பிரச்னையும் இல்லை.

அகலமான சாலைகள் இருந்தால் தாழ்வுதள பேருந்தை இயக்குவதில் பிரச்னை இல்லை. மாற்றுத்திறனாளிகளை ஏற்ற அதிகபட்சம் 3 நிமிடங்கள் ஆவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மற்ற மாவட்டங்களில் அனைத்து பேருந்துகளையும் இயக்கலாம்" என தெரிவித்தார். அனைத்து தரப்பு விளக்கத்தையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை

ABOUT THE AUTHOR

...view details