தமிழ்நாடு போக்குவரத்து, சுகாதாரத்துறை அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர் ஆகியோர் பல்லவன் சாலை பேருந்து பணிமனையில் கோவிட்-19 தொற்று பரவாமல் தடுக்க அரசுப் பேருந்துகளுக்கு மருந்துகள் தெளித்து சுத்தப்படுத்தும் பணிகளை பார்வையிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கோவிட்-19 தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, பேருந்துகள் சுத்தப்படுத்துவது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தனியார், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அவர்களிடம் கோவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விபரங்கள் எடுத்துக்கூறப்பட்டன.
அரசுப்பேருந்துகள் தனியார் பேருந்துகள் உள்பட 2லட்சத்து 50 ஆயிரம் பயணிகள் பயன்படுத்தும் துறையாக போக்குவரத்து துறை உள்ளது. பேருந்துகளில் கோவிட்-19 தொற்று பரவாமல் தடுக்க ஊழியர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. கோவிட்-19 தொற்று காரணமாக புதிய ஓட்டுனர் உரிமம் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருவிழா காலங்களில் சிறப்பு பேருந்து இயக்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது.