சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரித்து மூன்று மாதத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டுமென உயர் கல்வித் துறைச் செயலர் அபூர்வா உத்தரவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா, "அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன். அரசு மட்டுமல்ல யார் மீதான ஊழல் புகார்கள் குறித்து விசாரணை செய்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.
பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பில் இருந்து எந்தவிதமான விதிகளையும் மீறி நான் செயல்படவில்லை. துணைவேந்தராக நியமிக்கப்பட்டதிலிருந்து நேர்மையுடன் செயல்பட்டுவருகிறேன். நான் ஒரு பைசாகூட கையூட்டாகப் பெற்றதில்லை. என்மீது புகார் மனு அளித்தவர்கள் யார் என்பது எனக்குத் தெரியாது.
'ஒரு பைசாகூட கையூட்டு பெறவில்லை...விசாரணையை எதிர்கொள்ளத் தயார்'- துணைவேந்தர் சூரப்பா நான் எந்தவித அப்பழுக்கு இல்லாமல் பணியாற்றிவருவதுடன், இதற்கு முன் பல்வேறு முன்னணி கல்வி நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளேன். மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐஎஸ்சி உள்ளிட்ட பெரிய நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளேன். என்மீது இதுவரை எந்தக் குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டதில்லை.
எனவே, இந்தப் பொய்யான குற்றச்சாட்டுகள் குறித்து எனக்கு கவலை இல்லை. விசாரணை நடத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள விசாரணைக்குழு குறித்தும் எனக்கு கவலை இல்லை. பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரின் அதிகாரத்திற்குள்பட்டு சில பணி நியமனங்களைச் செய்துள்ளேன். அதில், எவ்விதமான விதிமீறல்களும் இல்லை.
என் வங்கிக் கணக்கை யார் வேண்டுமானாலும் ஆய்வுசெய்யலாம். நான் துணைவேந்தராக இருந்த காலத்தில் முறைகேடாக ஒரு பைசாகூட பெறவில்லை. அண்ணா பல்கலைக்கழகப் பொறுப்பில் எனது மகள் நியமிக்கப்பட்டதிலும் எந்தவித விதிமீறலும் இல்லை.
அறிவுசார் சொத்துரிமை துறையில் எனது மகள் நிபுணத்துவம் பெற்றவராக இருந்ததாலும், அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள அந்தத் துறை சார்பில் கேட்டுக் கொண்டதாலும் அவர் கௌரவப் பொறுப்பில் செயல்பட்டுவருகிறார். நான் துணைவேந்தர் பொறுப்பிலிருந்து விலக மாட்டேன்" என்றார்.
இதையும் படிங்க:துணை வேந்தர் சூரப்பா சர்ச்சை: நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழு