சென்னை தாம்பரம் அடுத்த சோமங்கலம் பகுதியில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் தங்கி ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் வேலை செய்துவந்தனர்.
இந்நிலையில், சிவநாத்சிங் (26) குல்தீப் கேர்வால் (21), மந்தீப்சிங் (21) உள்பட ஆறு பேர் புதுநல்லூர் பகுதியில் உள்ள ஏரியில் குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் குல்தீப் கேர்வாலிடம் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த செல்போனை பறித்துள்ளனர். பின்னர் பணம் கேட்டு மற்ற அனைவரையும் மிரட்டியுள்ளனர். அப்போது, பணம் தர மறுத்ததால் சிவநாத்சிங்கை அந்தக் கும்பல் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது.
இதைத் தொடர்ந்து, காயமடைந்த நிலையில் கிடந்த சிவநாத்சிங்கை அவரது நண்பர்கள் மீட்டு காட்ரம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு, அவருக்குக் கையில் எட்டு தையல் போடப்பட்டது, தற்போது அவருக்கு அந்தக் கை வேலை செய்யவும் இல்லை. இது குறித்து சோமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.
இந்நிலையில், காவல் துறையினர் நல்லூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த நான்கு பேரைப் பிடிக்க முற்பட்டபோது அங்கிருந்து தப்ப முயன்றனர்.
கைதுசெய்யப்பட்டுள்ள இருவர் பின்னர் நான்கு பேரையும் காவல் துறையினர் பிடித்து விசாரனை நடத்தியதில் வடமாநில தொழிலாளர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் என்பதும் அவர்கள் சோமங்கலம் அருகேயுள்ள பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த எலியாப் (எ) விக்னேஷ் (18), கொரில்லா (எ) விக்னேஷ் (19), உள்பட இரண்டு சிறுவர்கள் என்பதும் தற்போது 144 தடை உத்தரவு போடப்பட்ட நிலையில் கையில் பணம் இல்லாததால் முதல்முறையாக வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
பின்னர் அவர்களிடமிருந்து செல்போன், இருசக்கர வாகனம், கத்தி ஆகியவற்றைக் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். அதன்பின்னர், இருவரையும் ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி மதுராந்தகம் சிறையில் அடைத்தனர். மேலும் இரு சிறுவர்களை செங்கல்பட்டு சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.
இதையும் படிங்க:கன்னியாகுமரியில் ஆலய பங்கு பேரவை செயலாளருக்கு கத்திக்குத்து - சிசிடிவி காட்சி வெளியீடு