சென்னை: கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில், வடகிழக்கு பருவமழை அடுத்த மூன்று தினங்களில் தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும் எனவும் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடிய காற்றழுத்த தாழ்வு பகுதிகளின் காரணமாக, வடகிழக்கு பருவமழை துவக்க நிலையில் வலுக்குறைந்து காணப்படும் எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய தென் மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், “இன்று முதல் (அக்.19) தென்மேற்கு பருவமழை முழுமையாக விலகியது. வடகிழக்கு பருவமழை இன்னும் 3 நாட்களில் தொடங்க உள்ளது. சென்னையை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை 74% அதிகம் பெய்துள்ளது. வழக்கமாக 328 மி.மீ. அளவுக்கு பெய்யும். ஆனால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை 354 மி.மீ. அளவுக்கு பெய்துள்ளது.
வழக்கமாக சென்னையில் 448 மி.மீ. அளவுக்கு பெய்யும் தென்மேற்கு பருவமழை, இந்த ஆண்டில் 779 மி.மீ. அளவுக்கு பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு 29 செ.மீ. முதல் 37 செ.மீ. வரை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வடகிழக்கு பருவமழை 39 செ.மீ. வரை மழைப்பொழிவு தரும்.
தென்மேற்கு பருவமழை தமிழ்நாட்டில் இயல்பைவிட 8% அதிகமாக பெய்துள்ளது. அக்.21-ல் வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அக்.23-ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அடுத்து 24 மணி நேரத்தை பொறுத்தவரை தென் தமிழகத்திலும், வட தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்.