சென்னை:வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று (நவ.18) சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்பாக அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்பு அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வடகிழக்கு பருவ மழை பணியை சீரமைக்க நீர் சேமிப்பு, உபரி நீர் வெளியேற்றத்தின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி அனைத்து மாவட்டங்களிலும், மாநகராட்சிகளிலும் பேரிடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பருவமழை தொடர்பாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை சார்பில் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம், அவ்வாறு ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வெள்ள உபரி நீர் வெளியேற்றம் தொடர்பாக அணைகள் மற்றும் ஏரிகளில் நிலவரங்களை பொதுப்பணி துறை உள்பட மாநில பேரிடர் மேலாண்மை மற்றும் பிற துறை அதிகாரிகள் கண்காணித்து அரசுக்கு தகவல்களை அளித்து வருகின்றனர்.