சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நாள் முதல் மழையின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் மிகத் தீவிரமாக உள்ளது. குறிப்பாக, கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த 24 மணி நேரத்தில், 48 மி.மீ மழைப் பதிவாகி உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் அதிகபட்சமாக, அமராவதி அணை 12 செ.மீ மழையும், பழனியில் 11 செ.மீ மழையும் பதிவானது. இதைத் தொடர்ந்து கேரள கடலோரப் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி நிலவுகிறது. பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்குப் பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி நிலவுகிறது.
இதனால் வரும் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இதற்கு முன்னதாக, நாளை (ஜன.11) மற்றும் நாளை மறுநாள் (ஜன.12) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகள்: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.